ads

Wednesday 25 January 2012

காத்தவராயன் கதை / KAATHAVARAYAN

காத்தவராயன்.

சிவனின் பற்றி எரியும் நெற்றி கண்ணில் இருந்து தோன்றியவன்.  அந்த வகையில் மகன்.

புராண காலத்தில் ஒரு நாள் பொழுது புலர்ந்தது.   ஆதித்தியன் தன் சேவையை ஆரம்பித்தான். 

கைலாயம்.... !

சிவனின் வீடு. 

அங்கே..... சக்தி சிவன் இருவருக்கும்,  வழக்கம்போல்  வாய் தகராறு.  காரணம் இருப்பதால்தான் கலகம் வருகிறது என்றாலும்,  அன்றைய காலகட்டத்தில் மூன்று லோகத்திலும் அதிகம் முனுமுனுக்கப்பட்டது இவர்கள் குடும்ப சச்சரவுதான். 

கண்ணில் தோன்றிய காத்தவராயனுக்கு கண்ணீர் வராத குறைதான்.  உண்மையில் காத்தவராயன் அம்மா பிள்ளை.

தாய்க்கு துணையாக தந்தையை எதிர்த்தான். 

தாங்குவாரா சிவன். 

தாங்கவில்லை.  பிள்ளை பாசத்தால் ஏங்கவும் இல்லை. எதிர்த்தார்.  பொதுவாக ஆரம்பத்தின் அடுத்த பக்கம் முடிவு தானே.  வாய் சொல்லில் இருந்த  சண்டை,  கடைசியில் சிவனின் காலால் பூலோகத்திற்கு தள்ள பட்டாள் சக்தி. 

அவ்வளவுதான்.... நெற்றி கண் இல்லதாத காத்தவராயன் நெருப்பாக மாறினான். 

அப்பா சிவனுக்கு இப்போது ஆத்திரம் வரவில்லை.  பிள்ளை மனம் அறிந்து பிழையை பொறுத்தார். 

மகனே.... காத்தவராயா.... உன் தாய் பாசத்திருக்கு தக்க பரிசு என்ன தெரியுமா?  இனி... சக்தி எத்தனை அவதார பிறவி எடுத்தாலும்,  சத்தியோடு நீயும் அவதரிப்பாய் என்று அருள் பொழிந்தார். 

இது காத்தவராயனை பற்றிய சிறு குறிப்பு.   சரி..... சக்தி பூலோகத்திருக்கு வரப்போகிறார்.  அப்படியானால் பெற்ற வரத்தின் பிரகாரம் தாயாரும் வர வேண்டுமே. 

வந்தார்.  மாரியம்மன் என்ற பெயரில்.  உடன் அவருக்கு மகனாக காத்தவராயனும் பிறந்து வளர்ந்தார். 

வளர்ந்து வாலிபம் எட்டிய காத்தவராயனுக்கு ஒரு காதல் கதை இருக்கிறது தெரியுமா?

ஆரியமாலா...!

அந்த்தன குலத்தில் உதித்தவள்.  பூலோக தேவதை என்றால் புரியும் உங்களுக்கு.   அழகின் இருப்பிடம்.  சீரும் சிறப்புமாக, செல்வ செழிப்புமாக வளர்க்கப்பட்ட ஆரியமாலாவிருக்கு காத்தவராயன்தான் கணவன் என்பது காலத்தின் கணக்கு. 

அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்பது,  ஆரியமாலாவிருக்கு பொருந்தும்.  ஆபத்து அவளிடம் இல்லை.  அவள் பிறந்த போதே உடம் பிறந்த சகோதரம் கழுகு மரம். 

இது இப்படியே இருக்கட்டும். 

ஒருநாள்..... ஆரியமாலாவை பார்த்தான் காத்தவராயன்.  தன் வாழ்நாளில் இப்படி ஒரு பேரழகியை பார்த்திராத அவனுக்கு கண்டதும் காதல் வந்தது. 

காவிய சிலம்பாய் நான் இருந்தால் - உன்
கால்களில்லாவது தவழ்ந்திருப்பேன்

தென்றல் காற்றாய் நானிருந்தால் - உன்
சேலையில்லாவது ஒளிந்திருப்பேன்

மலர் கொடியே அதைநான் இழந்து விட்டேன்
மனிதனாக அல்லவா பிறந்து விட்டேன்

என்று வைரமுத்து எழுதினாரே,  அந்த மாதிரி,  ஆரியமாலாவின் அழகை பார்த்து கவிதை எழுதினானோ என்னவோ  காதல் கொண்டான். 

ஆனால் காத்தவராயன் யார்?  நாவற்பழத்திலேயும்,  நல்காயாம் பூவிலேயும்,  காக கருப்புலேயும்,  கரும் கருப்பு. 

ஆனால்.... ஆரியமாலாவோ அந்த்தன குலத்து பெண்.  செதுக்கி வைத்த செப்பு சிலை மாதிரி இருப்பாள்.   காதலை ஏற்க ஆரியமாலாவிற்கே விருப்பம் இல்லை.

அம்மாவிடம் சொல்லி எப்படியாவது ஆரியமாலவை திருமணம் செய்துவிட வேண்டும் என்பது காத்தவராயனின் திட்டம்.

திட்டம் என்னவோ சரிதான்.  மாரியம்மாவுக்கோ மனது ஒப்பவில்லை.   இருக்காதா பின்னே.  ஆரியமாலாவோ ஆபத்தின் மறுவடிவம் என்பது புரியும் அதனால் மறுத்தாள்.

மகனே.... காத்தவராயா....  ஆரியமாலா அந்தன குலத்து பெண்.  நமக்கு சரிப்பட்டு வராது.   அதோடு அவள் பிறந்த போது,  ஒரு கழுகு மரமும் பிறந்திருக்கிறது.

அவளை மணக்க போகிறவன் அந்த மரத்தில் தொங்க வேண்டும் என்பது விதி  அமைப்பு.  அந்த மாதிரி ஒரு கோலத்தில் உன்னை பார்க்க எனக்கு சம்மதம் இல்லை என்று மறுத்தாள்.

ஆனால் விடவில்லை காத்தவராயன்.  தன் பால்ய தோழன் தொட்டிகட்டி சின்னானோடு சேர்ந்து,  ஆரியமாலா தூங்கும் போது திருட்டு தாலி கட்டினான்.

கண் விழித்த ஆரியமாலாவிற்கு அதிர்ச்சி.  கழுத்தில் தாலி.  கழட்டி பார்த்தாள்,  கழற்ட முடியவில்லை.  அறுக்க பார்த்தாள் அறுக்க முடியவில்லை.  எல்லாம் விதி என்று அமைதியானாள்.

தாலி கட்டிய செய்தி தாயாருக்கு போனதும் தவித்து போனாள்.  செய்யத்தகாத காரியத்தை செய்துவிட்டு வந்திருக்கிறாய்.  இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது.  உன் பெரியம்மாவிடம் போய் சொல்லி,  ஆக வேண்டியதை போய் பார்.

யார் அந்த பெரியம்மா?

காளியம்மா...!

காத்தவராயனும் காளியம்மன் இருப்பிடம் நோக்கி போனனான்.  காளியம்மனுக்கு என்று பெரிய கோட்டையே இருந்தது.   அந்த கோட்டையை  சுற்றிலும் காவல் தெய்வங்கள் இருந்தது.  கோட்டையை பூதகணங்கள் வேறு காவல் காத்தது.

கோட்டையை நெருங்கினான்.  வாயிற்கதவு பூட்டபட்டிருந்தது.  கதவை திறந்து உள்ளே போக முயன்றான்.  பூதகணங்கள் தடுத்தது.

யாரடா நீ?  எங்கள் கட்டு கவலை மீறி உள்ளே போக முயல்கிறாயே.... என்ன விஷயம்?

என் அம்மாவை பார்க்க வேண்டும்.

இப்போது முடியாது.  அவர்கள் நிஷ்டையி ல்  இருக்கிரார்கள்.  போ.... போய்விடு.

முடியாது.  அவசரமான காரியம்.  அவசியம் பார்க்க வேண்டும்.

சொன்னால் சொன்னதுதான்.

காதல் மயக்கத்தில் இருந்த காத்தவராயனுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.  காவல் காத்த பூதங்களை அடித்து நொறுக்கினான்.  தலை வேறு,  கை கால் வேறாக பிய்த்து எறிந்தான்.

முடிந்த வரை போராடிய பூதங்கள் அபயம்...அபயம்... என்று அலறியபடி காளியம்மனை நோக்கி ஓடியது.

தவ கோலத்தில் இருந்த தாயார் கண் விழித்தார்.  என்ன நடந்தது அமைதியாக சொல்லுங்கள்.

ஒருவன் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்றான்.  இப்போது முடியாது என்றோம்.  அதற்காக எங்களை போட்டு பந்தாடி விட்டான்.

அப்படியா.... அவனை நான் ஒரு கை பார்கிறேன் என்ற காளியம்மன் தன கையில் இருந்த சக்கரத்தை வீசியது.

பாய்ந்து வந்த சக்கரத்தை மந்திரம் ஓதி... சாந்த்த படுத்தி பிடித்து போட்டாம் காத்தவராயன்.

என்னடா இது போன சக்கரஆயுதத்தை இன்னும் காணவில்லை என்று யோசித்த  காளி, அடுத்து தன், கோடரியை அனுப்பியது.

வந்தது கோடரி..  சக்கரத்திருக்கு ஏற்பட்ட கதிதான் கோடரிக்கும்.  அடுத்து வால்,  அடுத்து சங்கு என்று தன் கை ஆயுதங்களை எல்லாம் அனுப்பியது காளி.

எல்லாம் போனதே தவிர திரும்பி வரவே இல்லை.  அவவளவுதான் காளியம்மனுக்கு கண் மண் தெரியாத கோவம்.

யாரடா நீ?

என் கோட்டைக்கே வந்து என்னிடமே மோதுகிறாயா....உன்னை என்ன செய்கிறேன் பார்...என்று ஆவேசமாக எழுந்த காளி,  ஆவென்று வாயை பிளந்தபடி,  வானுக்கும் பூமிக்குமாய் பறந்து வந்தது.

பார்த்தான் காத்தவராயன்.   பதறினான்.  ஐயையோ ..... பெரியம்மா கடும் கோவத்தில் வருகிறது.  இப்போது நம்மை பார்த்தால் மகன் என்று கூட பார்க்காது.  கடித்து குதறிவிடும்.  எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று யோசித்தான்.

அடுத்த கணம் அந்த யோசனை வந்தது. சின்ன குழந்தையாக உருமாறினான்.  வாயை பிளந்து வந்த காளி வாய் வழியாக உள்ளே நுழைந்து வைற்றுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

ஆவேசமாக வந்த காளிக்கு யாரும் கண்ணில் படாததால் கோவம் தணிந்தது.  எவனோ பொடிப்பயல்,  பயந்து ஓடிவிட்டான் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டது.

சாந்தமாக போய் தன் இடத்தில் அமர்ந்து கொண்டது.  அப்போதுதான் காத்தவராயன் அந்த காரியத்தை செய்தான்.

வைற்றுக்குள் இருந்தவன்... காளியின் ஒரு பக்க குடலை பிடித்து கொண்டு ஓங்கி உதைத்தான்.

அய்யய்யோ என்று அலறியது காளி.  என்ன ஆனது வைற்றுக்கு என்று யோசிப்பதற்குள்,  மறு பக்க குடலை பிடித்து இழுத்து உதைத்தான்.

இப்படி மாறி மாறி உதைத்ததும் வலி பொறுக்காத காளி, தன் ஞான பார்வையால் என்ன நடக்கிறது என்று பார்த்தது.

உள்ளே காத்தவராயன்.

அடேய்.... நான் பெத்த மகனே காத்தவராயா.... என்னடா செய்கிறாய்.

எனக்கு ஒரு வரம் வேண்டும்.

அதற்க்கு நேரில் வர வேண்டியதுதானே.   வைற்றுக்குள் போய் என்ன செய்கிறாய்.

நேரில் வந்தால் சம்மதிக்க மாட்டாய் என்று தெரியும்,  அதனால்தான் இப்படி வந்தேன்.

சரி என்ன வரம்.

நான் ஆரியமாலாவை திருமணம் செய்ய வேண்டும்.

என்னது ஆரியமாலாவா....முடியாது.

மீண்டும் ஒரு பக்க குடலை பிடித்து இழுத்து உதைத்தான்.  வலி பொறுக்காத காளி மீண்டும் அலறியது.

அடேய்... ஏன்டா என் பிராணனை வாங்குறே.  அதை தவிர வேறு என்ன வரம் வேண்டும் கேள்.

முடியாது.

சரி வெளியில் வா.... வரம் தருகிறேன்.

முடியாது.  இப்போதே சொல்.  நான் வெளியில் வந்தால் என்னை கொன்றே போட்டு விடுவாய்.

நான் பெற்ற மகனடா நீ... வரம் தருகிறேன் வா.

இப்போதே சொல்... வருகிறேன்.

சரி சம்மதம்.

இப்படி போராட்டம் நடத்திய பின் காத்தவராயன் வெளியே வந்தான்.  காளி தந்த வரத்தின் படி திருமணம் நடந்தது.   ஆரியமாலா பிறப்பின் ரகசியபடி காத்தவராயன் கழுகு மரத்தில் தொங்கினான்.  இறுதியில் சிவனின் அருளால் காப்பாற்ற பட்டான்.

இன்று பலருக்கு காவல் தெய்வமாக,  குல தெய்வமாக இருக்கும் காத்தவராயன் கதை இது.  ஒவ்வொரு மாரியம்மன் கோவிலிலும் வாசலில் காவல் தெய்வமாக இருக்கிறார்.


2 comments:

  1. கடலுர் மாவட்டத்தில் சில கிராமங்களில்
    மாட்டு பொங்கலை அடுத்த காணும் பொங்கல் தொடங்கி கன்னி ஆட்டம் என்ற நடத்துகின்றனர்.அதில் ஏழு கன்னி
    பெண்கள் ஆடுகின்ற்னர்.காத்தவராயன்
    என்ற பெயரில் ஒரு சிறுவன் கையில்
    சாட்டையுடன் ஆடுகிறான்.பம்பைகாரர்
    பம்பை அடித்து பாடவும் ஏழ் கன்னிகளும் காத்தவராயனும் பமபை ஒலிக்கு ஏற்ப குதித்து ஆடுகின்றனர்.நீங்கள் சொல்லும் கதையில் கன்னிமார்களைபற்றி தும் கூறவில்லையே.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...