ads

Monday 30 April 2012

நித்தியானந்தாவிற்கு ஒரு கடிதம்

சுவாமிஜி நித்தியானந்தா அவர்களே... வணக்கம்.

முப்பத்துநாலு வயதிற்குள் புகழின் உச்சிக்கு போனதும் நீங்கள்தான். அடி மட்டத்தில் வீழ்ந்து அவமான பட்டதும் நீங்கள்தான்.

இதுவரை உங்களை பற்றி நான் தெரிந்ததும், அறிந்ததும் கொஞ்சம்தான். திருவண்ணாமலையில் பிறந்தீர்கள் என்பது தெரியும். 

ஆதிசங்கரர் மாதிரி பாலய பருவத்திலேயே ஆன்மீகத்தில் அடி எடுத்து வைத்தீர்களாம். உடல் தாண்டி அனுபவம் என்னும் பேரானந்த நிலையை பனிரெண்டு வயது இருக்கும் போதே அருணாச்சலமலை அடிவாரத்தில் பெற்றதாக சொல்கிறார்கள். 

அனேகமாக இது நீங்கள் சொல்லித்தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கும். 

பதினேழு  வயது வயதிலேயே  குடும்பத்தை விட்டு பிரிந்து பிரிவிராஜா வாழ்க்கையை துவக்கிய நீங்கள் இதுவரை தொட்ட வெற்றி படிகள் பல.

முதலில் உங்களை தியான பீட நிறுவனராக தெரியும். பின் பல்வேறு புத்தகங்கள் வழியாக உங்களை தெரியும்.

நானும் உங்களை நேசித்து இருக்கிறேன். அந்த நேசிப்பு என்பது 151 நாடுகளில்,    ஒரு கோடி பேருக்கு மேல் இருக்கும் பக்தர்களில் ஒருவராக இல்லை.

 உங்களை ஒரு அறிவாளியாக, சிந்தனைவாதியாக, தன்முனைப்பு தரும் தத்துவ ஞானியாக பார்த்ததினால் வந்த அன்பு.

உங்களை நீங்கள் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டி கொண்ட விதம் வேறு.

ஒரு பிரம்மசாரியாக, ஒரு சந்நியாசியாக, விவேகானந்தரின் சீடன் போல் மற்றவர்களை நம்ப வைத்தீர்கள்.

உங்களை கடவுளின் மறு அவதாரமாக மக்கள் பார்க்க தொடங்கினார்கள். நீங்கள் அப்படி இல்லை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசம், சல்லாபம்.

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா  மாதிரி பரபரப்பாக இருந்த நீங்கள், ஒரே நாளில் ஓடி ஒளிகிற மாதிரி நிலைமை உருவானது.

ஏற்றதாழ்வுகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. நீங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

ஆனால் அது உங்கள் தகுதிக்கு சரியா என்பதுதான் கேள்வி.

உங்களுக்கு அடங்க மறுத்த ஆண்மை, வடிகால் தேடிய இளமை, இரண்டும் சேர்த்து உங்களை புதை குழியில் தள்ளி விட்டது.

என்ன செய்ய?  உங்கள் கெட்ட காலம் ரஞ்சிதா உருவத்தில் இருந்தது. 

வயசு கோளாறு என்று விட்டு விட முடியவில்லை. உங்கள் தவறு எங்கள் ஹிந்து மதத்திற்கு இழுக்காக இருக்கிறது.

ஹிந்து மதம் ஒன்றும் வாழ்க்கையை வெறுத்துவிட்டு சந்நியாசம்  போ என்று சொல்லவில்லை.

ஹிந்து தெய்வங்கள் எல்லாமே கணவன் மனைவியாகத்தான் காட்சி அளிக்கிறார்கள்.
 குடும்பம் நடத்துகிறார்கள், குழந்தைகள் பிறக்கிறது.  இப்படிதான் புராணங்கள் சொல்கிறது.

அது மட்டும் இல்லை. உயிரின உற்பத்திக்கு ஆண் பெண் கூடல் என்பது அவசியம்.  இதை ஹிந்து மதம் தடுக்கவே இல்லை.

சந்நியாசிக்கு சம்சாரம் அவசியமா என்ற கேள்விக்கும் வேலை இல்லை.  காரணம்.... ரிஷியாக இருந்தாலும் ரிஷி பத்தினிகள் இல்லையா?

அதனால் தவறில்லை. ஆனால் நீங்கள் வெளிப்படையாக இல்லாமல், வேழதாரியாக இருந்ததுதான் குற்றம்.

கல்கி என்று ஒருவர் இருக்கிறாரே... அவர் கணவன் மனைவியாகத்தான் இருக்கிறார்கள்.  யாரும் குற்றம் சொல்லவில்லை.

மேல்மருவத்தூரில் இருக்கிறாரே பங்காரு அடிகள், அவர் கூட குடும்ப வாழ்க்கைதான் நடத்துகிறார்.  யாரும் குறை சொல்லவில்லை. பின் ஏன் உங்களை மட்டும் குற்றம் சொல்கிறார்கள்.

நீங்கள் நாணயம் இல்லாதவர். நம்பியவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். 

கேவலம் மாற்றான் மனையாளை தொடும் போது கூடவா மனசு  கூசவில்லை.

இங்கே ரஞ்சிதாவை வலுகட்டாய படுத்தவில்லை என்பது மட்டும் தான் ஒரே ஆறுதல்.

சரி... உங்கள் போலி முகமூடி  வெளியே தெரிந்த பிறகு என்ன சொன்னீர்கள்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்றீர்கள். அப்பாண்டம் ஒட்டு வேலை என்றீர்கள். மாற்று மதத்தவர் செய்த  சதி என்று அடுத்த குண்டை தூக்கி போட்டீர்கள்.

நான் ஆண்மை  இல்லாதவன்  என்று அடுத்த பொய். மனதை ஒரு நிலை படுத்த காமசூத்திர பயிற்சி என்று அண்ட புழுகு. ஒரு நாள் உண்மை தெரியும் என்று ஆகாச புழுகு.

கிட்டத்தட்ட அரசியல்வாதி  மாதிரி நீங்களும் பொய் பொய்யாய் புளுகி தள்ளினீர்கள்.

வழக்கு, தலைமறைவு, கைது, ஜாமீன், மீண்டும் ஆன்மீகவாதி என்று பல்வேறு நிலைகளை கடந்தாலும், மிஞ்சியது என்னவோ ரஞ்சிதா உறவு என்பது உங்கள் ஆத்ம திருப்தி.

சாக்கடையில் விழுந்தாலும் சந்தோசம் படுக்கையில் இருக்கிறது இல்லையா. வாழ்க நீவிர்.

இப்போது மீண்டும் பத்திரிக்கையில் எட்டு கால பத்தியில் இடம் பிடித்து விட்டீர்கள்.

இனி நீங்கள் குருஜி   இல்லையாம்.  திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு கல்யாணம் வந்த மாதிரி, இப்போ நீங்கள் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளாம்.

அடேங்கப்பா... என்ன ஒரு வளர்ச்சி. 


இந்த பதவி வெறும் ஐந்து கோடி பேரத்தில் முடிந்து இருக்காது. திரை மறைவில் கை மாறியது எவ்வளவோ,  அந்த சந்நிதானத்துக்கே வெளிச்சம். காரணம் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆதினத்திற்கு உண்டு.


உண்மையில் இந்த பதவி பணத்திற்காக மட்டும் வரவில்லை. ஜாதி பற்றும் ஒரு காரணம்.


உண்மைதானே நித்தியானந்தா அவர்களே. 

உங்களுக்கு பதவி வந்ததை பற்றி கவலை இல்லை. 

அதற்கு தகுதி ஆனவரா நீங்கள்.  

படுக்கையை பகிர்ந்து கொண்ட பத்தினி தெய்வத்தை பக்கத்தில் வைத்து கொண்டு தானே மகுடம் சூட்டி கொண்டீர்கள்.


சமயகுரவர்களில் ஒருவரான திருஞான சம்மந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு  உருவாக்கப்பட்ட ஆதினத்திற்கு நீங்கள் பொருத்தமானவரா?

சங்ககால தொய்மையான மடத்திற்கு ஒரு கரும் புள்ளி நீங்கள் என்பது எங்கள் எண்ணம். 

மாற்றான் மனையாளை தொட்ட சராசரி மனிதன் நீங்கள் . உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது அந்த பதவியில் அமர. 

காவி வேட்டிகே களங்கம் நீங்கள். எத்தனையோ மகான்களால் போற்றி பாதுக்காக்க பட்ட ஹிந்து மதம் உங்களை போன்றவர்களால் அசிங்க படுகிறது.

நீங்கள் ஹிந்து மதத்தின் களங்கம். 

இருக்கும் கொஞ்சம் நஞ்ச மரியாதையை இழப்பதற்குள் நீங்களாக பதவி விலகுவது நல்லது.  மதுரை ஆதினம் சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்பது கேவலம். 

நாளை அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் இன்றே வெளியே போவது நல்லது. யோசியுங்கள் நித்தியானந்தா.


1 comment:

  1. ஓ மை காட் செம அழகா அர்த்தமுடன் நியாயமா பேசறீங்க நண்பா...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...