ads

Wednesday 27 November 2013

வாலி உன் புகழ் வாழி!

             



   பாட்டுக்களால் திரைப் பாட்டுக்களால்- பல
   பாடங்கள் சொல்லியப்  பாவலன்
   மெட்டுக்களால் மன மொட்டுக்களை -மெல்ல
   மலர்ந்திடச் செய்திட்ட மாயவன்

   கன்னித்தமிழ் அவன் கைவண்ணத்தில் -மணப்
   பெண்ணினைப் போலவே மிளிரும்
   வண்ணத்திரைப் பாட்டு வரிகளெல்லாம்- மேக
   மின்னலாய் உள்ளத்தில் ஒளிரும்
               
  ஏட்டினிலும் திரைப் பாட்டினிலும் -  அவன்
  தீட்டியச் செந்தமிழ் கோலங்கள்
  பாட்டல்லவே  வெறும் பாட்டல்லவே -அவை
  பாட்டாளி மக்களின் வேதங்கள்

  பழச்சாறெடுத்து மலைத் தேனெடுத்து- காதல்
  பாட்டென்று கலந்து கொடுத்தான்
  இளம்உள்ளங்களை  மெல்லக்கிள்ளிவிட்டு- அவர்
  இராத்திரித் தூக்கத்தைக் கெடுத்தான்

  சங்கத்தமிழ் நல் முத்தெடுத்து-  திரைச்
  சங்கதிக்குள் சொல்லிப் படித்தான்
  தங்கத்தமிழ் சொற் பூக்களினால் - பா
  மாலைகள் பலவும் தொடுத்தான்
       
  தெய்வப்பக்தியினை தேசப் பற்றுதனை - தன்
  பாட்டுக் களின்வழி விதைத்தான்
  தாய்ப்பாசத்தினை  தந்தை நேசத்தினை -நம்
  பிள்ளைகள் உணர்ந்திட வைத்தான்
           ‘   ‘  ‘
  எட்டைய புரத்துப் பாரதிபோலவே- வாலி
  ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தான்
  பட்டையைக் கிளப்பும் பாட்டுத்தீயினால்- சாதிக்
  குப்பைகளைக் கூட்டி எரித்தான்
           
  எண்பதுவயதினை தாண்டிய போதிலும் - புதுச்
  சிந்தனை பூத்திடும் இளைஞன்
  கற்பனைஊற்றுகள் வற்றாத கலைஞன் - வாலி
  காலத்தை வென்றிட்டக் கவிஞன்

கொட்டும்மழையென கவிக் கொட்டியவாலி- விடை
பெற்றே வேறூர் சென்றும்விட்டான்
சுற்றும்பூமியிது  சுற்றும் காலம்வரை- தமிழ்
உள்ளங்களில் வாலி வாழ்ந்திருப்பான்.

எண்பதுவயது ஆனபின்னரும்- வாலி
என்றுமே வாலிபக் கவிஞன்
வார்த்தைக்குள் வசியம் வைக்கும் - புதுச்
சூத்திரம் அறிந்த முனிவன்

மதிவாணன்

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...