ads

Wednesday 27 November 2013

காமமும் ஆசையும்



காமமும் ஆசையும் நிறைவு பெறாதது.  காம வயப்பட்டவர்களுக்கு துய்க்கும் போது, போதும் என்றுத் தோன்றும் ஆனால் அடுத்த நாள் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு எழும். ஆசையும் அப்படித்தான்.  

ஒரு சின்னக் கார் வாங்கினால் போதும் என்றுதான் தோன்றும், வாங்கியப் பிறகு இதை விட சற்று பெரியதாய் வாங்கினால்  பரவாயில்லையே என்றுத் தோன்றும். பெரியதாய் வாங்கிவிட்டால் பிஎம் டிபிள்யூ வாங்கினால் நன்றாக இருக்கும் என்று மனதில் ஆசை எழும். 

 மனம் பக்குவப்பட்ட நிலையை அடையும் போது மட்டுமே இவையெல்லாம் சாதாரணமாகத் தோன்றும், பக்குவப்பட்ட மனம் அடைய ஆன்மிக நிலையில் மேன்மைபெற வேண்டும். ஆன்மிக நிலையில் மேன்மைபெற இறைவன் மேல் மனம் நாட்டம் கொள்ள வேண்டும். 

இறைவன் மேல் நாட்டம் கொள்ள கொள்ள ஐம்புலன்கள் ஒரு பக்குவத்திற்கு வந்துவிடும். ஐம்புலன்கள் பக்குவப்பட மனம் செம்மையுறும்.  அப்போது உலக இன்பங்கள் நமக்குப் பெரியதாய் தோன்றாது. ஒரு ஞானியின் மனநிலை வாய்க்கும்.  

பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி என்ற அரசன். நகுசனின் மகன்.   யயாதி சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி என்பவளை மணந்து கொள்கிறான். 

அசுரகுல அரசன் விருஷபர்வன் என்பவனின் மகள் சர்மிஷ்டை. ஆரம்பத்தில் தேவயானியும் சர்மிஷ்டையும் நல்ல தோழிகள், ஆனால் அரசனின் மகள் என்பதால் தேவயானியை ஒருமுறை சர்மிஷ்டை அவமானப்படுத்தி விடுகிறாள். 

சுக்ராச்சாரியார் தன் மகளின் நிலை அறிந்து அரசனிடம் சொல்லி சர்மிஷ்டையை தேவயானிக்கு பணிப்பெண்ணாய் பணிபுரியுமாறு  செய்து விடுகிறாள்.

ஒரு முறை சர்மிஷ்டையை சந்தித்த யயாதி அவள் மீது காதல் கொள்கிறான். சர்மிஷ்டையின் வற்புறுத்தலால் அவளுடன்  ரகசியமாக குடும்பம் நடத்துகிறான்.

தேவயானிக்கு யது, துர்வசு என்ற மகன்களும், சர்மிஷ்டைக்கு திருஹ்யு, அனு, பூரு என்ற மகன்களும் பிறக்கின்றனர். 

சர்மிஷ்டை யயாதியின் இந்த ரகசிய உறவு  தேவயானிக்கு தெரிந்து விட, மிகுந்த கோபம் கொள்கிறாள். தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் சொல்லி அழுகிறாள். 

இளமையின் திமிர், அதனால் காமத்தில் கருத்திழந்து விட்டான் யயாதி, அவன் இளமை காணாமல் போகட்டும் , முதுமை அவனை அட்கொள்ளட்டும் என்று சபித்து விடுகிறார் சுக்ராச்சாரியார். 

 யயாதி  அவரிடம் மன்னிப்புக் கேட்டதும் சாபவிமோசனமும் அருள்கிறார். எவனாவது இளைஞன் ஒருவன் உனக்கு தன் இளமையை தர சம்மதித்தால் அவன் இளமையை நீ பெற்றுக¢கொண்டு முதுமையை  அவனுக்குக் கொடுத்து விடலாம் என்று விமோசனம் வழங்குகிறார். 

யயாதிக்கு தான் வாழ்க்கையை இன்னும் சரியாக அனுபவிக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. காமம் அவன் மனதில் கிளர்ந்தெழுகிறது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. 

அய்யோ இப்படியா அரசனாக இருந்தும், அந்தப்புரத்தில் இத்தனை அழகிகள் இருந்தும்,  சுகத்தை அனுபவிக்காமல் வாழ்ந்து என்ன பிரயோசனம் என்று அவன் மனம் ஏங்குகிறது. 

தன் மகன்கள் ஐவரையும் அழைக்கிறான். உங்களில் யாராவது என் முதுமையை எடுத்துக் கொண்டு எனக்கு இளமையைத் தாருங்கள் என்று கெஞ்சுகிறான்.  

ம்ம்.. பாரடா உடல் கிழடு தட்டியும், கிழவனுக்கு ஆசை அறுந்து போகவில்லை.. இன்னும் அனுபவிக்க வேண்டுமாம்.. இவரது சில்மிஷத்தை தாங்க முடியவில்லை என்று பணிப்பெண்கள் யாரும் இவரது அறைக்கே செல்ல மறுக்கிறார்களாம். 

இவருக்கு இளமையைக் கொடுத்து விட்டு நாம் என்ன சாமியாராகப் போவதா.. முடியாது முடியாது.. சாபத்தை பெற்றவரே அனுபவிப்பதுதான் முறை என்று அவரது நான்கு மகன்களும் கூறிவிட, பூரு தந்தையின் அருகில் வருகிறான்.

தந்தையே என்னுடைய இளமையை எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் முதுமையை எனக்குத் தாருங்கள்.. என்கிறான்

  மகனே ! உண்மையாகத்தான் சொல்கிறாயா? 

ஆம்தந்தையே இளமை என்ன முதுமை என்ன? அழியக் கூடியது மனித உடல், இங்கே எதுவும் நிரந்தரமில்லை என்பதை நான் அறிவேன்.  ஆன்மா ஒரு நாள் இத்துப்போன இந்தச் சட்டையை கழட்டி எறிந்து விட்டுப் போகத்தான் போகிறது. 

இந்த உடலால் உங்களுக்கு ஓர் உபகாரம் செய்ய முடிந்தால் அதைவிட எனக்கு வேறு சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது, பெற்றுக்கொள்ளுங்கள் என்று அன்புடன் கூறினான் பூரு.

 பூரூவை பாசத்தோடு கட்டி அணைத்துக் கொண்டான் யயாதி.  மகனே! மிகச் சிறந்த மனிதன் நீயே!  நீ தான் உண்மையில் என் வாரிசு.. இந்த நாட்டை ஆளும் உரிமை உனக்கேத் தருகிறேன் என்ற யயாதி தன் முதுமையை கொடுத்துவிட்டு, மகனின் இளமையப் பெற்றுக் கொள்கிறான்.  

அளவுக்கு மீறி இன்பம் துய்த்து துய்த்தும் அவனுக்கு ஆசை அடங்கவில்லை.  ஆனால் மனதில் சிந்தனை தோன்றியது. இந்த ஆசை அடங்கவே அடங்காது போலிருக்கு.. 

உடல் வலுவிழந்த பின்னாலேயே அந்த உடலின் இயலாமையால் மனம் பக்குவப்படுமோ? பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே  ஆனால் என் மகனுக்கு இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு பக்குவம் வந்திருக்கிறதே .. அது எப்படி? எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணமோ? மனம் பக்குவப்பட்டுவிட்டால் உண்மை விளங்கும் போலிருக்கிறது.. 

நானும் என் மனதை பக்குவப்படுத்த வேண்டும், தவம் செய்தால் மனம் பக்குவப்படும் என்கிறார்கள்.. பார்க்கலாம்.. மகன் பூருவிடம் வந்தான் யயாதி.

மகனே நீ உன் இளமையைப் பெற்றுக் கொள். என் மனதை நான் பக்குவப்படுத்த வேண்டும். நீ நாட்டை ஆளும் அரசன். உனக்கு உடல் வலிமை முக்கியம்.. என் ஆசை தீரவில்லை.. ஆனால் மனதிற்கு ஒரு அயர்வு தெரிகிறது.. எவ்வளவு நாளைக்கு இப்படி என்ற கேள்விபிறக்கிறது. 

விளக்கில் எண்ணெய் வார்க்க வார்க்க தீபம் கொழுந்து விட்டு எரிவது போல் காமம் அதிகரிக்கவேச் செய்யும். ஆனால் காமத்தால் ஆன்மாவை மாயை அழுத்தமாய¢போர்த்துக் கொள்ளும் என்பதை உணர்கிறேன். 

நான் ஆன்மாவைப் பிரகாசம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.. அதற்காக நான் தவம் செய்ய போகிறேன். முழு மனதோடு சொல்கிறேன்.. நீ வா.. இதோ உன் இளமை என்று , பூருவிடம் இளமையைத் திருப்பிக் கொடுத்து விட்டு, விடைபெற்றான். 

கடுமையாய் தவம் புரிந்தான். அவன் ஆன்மா ஒளிபெற்று சுடர் விட்டது.  அக்னி வளர்த்து அதில் உடலை செலுத்தினான். அவன் ஆன்மா பிரகாசமான ஒளியுடலுடன் சொர்க்கம் சென்றது. இந்திரலோகம், கந்தர்வலோகம், பிரம்மலோகம் போன்ற உலகங்களில் சஞ்சரித்தான். 

 தான் மேன்மையடைந்து விட்டோம் என்று  யயாதிக்கு இப்போது  கர்வம் தோன்றியது. 

இந்திரன் யயாதியிடம் கேட்டான்..  யயாதி, உன் உடலையே அக்னியில் உகுத்தாய். இப்படி ஒரு மனதிடம் பெற்ற ரிஷியை நான் பார்த்ததில்லை. உன்னைப் போன்றோர் உலகில் உண்டோ? 

இந்திரனே தன்னைப் பற்றி வியந்து கேட்டதும், இன்னும் அதிக பெருமையுடன் ஆம் இந்திரரே! அப்படி பட்ட பெருமை எனக்கு மட்டுமே உரியது என்றுதான் நான் நினைக்கிறேன். வேறு யாரும் என்னைப் போன்ற இப்படியொரு காரியத்தை செய்யத் துணிய மாட்டார்கள் என்று தற்பெருமையுடன் கூறினான். 

யயாதி, தற்பெருமை ஒருவனின் அனைத்துப் புண்ணியங்களையும் அழித்துவிடும். உன் மனதில் கர்வம் அதிகரித்ததால்  உன் புண்ணியங்கள் உன்னை விட்டு விலகுகிறது, இனி சொர்க்கத்தில் வாழும் தகுதி உனக்கில்லை. நீ கிழே விழக்கடவாய்! என்றான் இந்திரன். 

யயாதிக்கு தன் தவறு புரிகிறது. மன்னியுங்கள் இந்திரரே! நல்லவர்கள் மத்தியில் என்னை விழச் செய்யுங்கள் என்று வணங்கியவாறு கிழே விழுந்தான்.  

ஒரு நட்சத்திரம் ஒளியுடன் கீழ் விழுவதை காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நான்கு  இளைஞர்கள் பார்த்தனர்.  அவர்கள் வேறு யாருமல்ல, யயாதியின் மகள் வழி பேரர்கள். தவசீலர்கள், அஷ்டகன், பிரதந்தனன், வசுமான், சிபி என்கிற பெயர்களைக் கொண்டவர்கள்.

 அவர்கள் தன் பாட்டனாரை அடையாளம் கண்டு கொண்டனர். ஏன் எந்த வீழ்ச்சி என்று கேட்டனர்.

தற்பெருமை என்னை சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளிவிட்டது. நான் செய்த தவப் புண்ணியங்கள் என்னை விட்டு விலகிவிட்டன என்றான் யயாதி. 

நீங்கள் வருத்தப்படவேண்டாம். எங்கள் புண்ணியங்கள் அத்தனையும் உங்களுக்குத் தருகிறோம் மீண்டும் சொர்க்கம் செல்லுங்கள் என்றார்கள் நால்வரும் ஒரே குரலில்.  புண்ணியத்தை தானம் செய்து மாபெரும் புண்ணியவான்கள் ஆனார்கள். 

அந்த சமயத்தில் வானிலிருந்து ஐந்து விமானங்கள்  தரை இறங்கின. அவர்கள் ஐந்து பேரையும் இந்திரலோகம் அழைத்துச் சென்றன. 

 பணிவுடன் இந்திரனை வணங்கினான் யயாதி. தற்பெருமையும் மோசமானது  நம்மை கீழே இறக்கிவிடக்கூடியது என்பதை அறிந்து கொண்டேன் என்று கூறினான். 

அதன் பின்  நிரந்தரமான ஆனந்தத்தில் திளைக்க சதா இறை நினைப்பில் வாழ ஆரம்பித்தான்.    

Mathivanan

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...