ads

Tuesday 3 December 2013

பணத்தைத் தின்ன முடியாது..



“பூமி வெப்பமயமாகிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவில் அண்டார்டிகா மற்றும துருவப் பனிப்பாறைகள் உருகுகின்றன  இமயமலையும் உருகுகிறது. இதனால் கடல் மட்டம் உயரும். 

நிலைமை இப்படியேப் போனால்  மாலத் தீவுபோன்ற  பலத் தீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும். பூமி வெப்பமயமாவதை தடுப்போம், சுற்றுச்சூழலை பாராமரிப்போம்,  இயற்கையை நேசிப்போம், பூமியைப் பாதுகாப்போம்.”

 புவியியல் ஆய்வாளர்கள் அடிக்கடி விடுத்துக்கொண்டிருக்கிற எச்சரிக்கைக் கலந்த கோரிக்கை  இது.

ஆனாலும் மனிதர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எங்கேயோ, எப்போதோ,   யாருக்கோ நடக்கப்போகிறது  நமக்கென்ன? என்கிற மனப்போக்குதான் எல்லோருக்கும். 

அப்படியொரு அலட்சியத்தால் இதோ  இந்தியாவில் இப்போது ஒரு சம்பவம். 

இமயத்தின் அடிமடியில் அமைந்திருக்கும் புண்ணியத் தலங்களான  கேதர்நாத் பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி போன்ற இடங்கள்..  உத்திரகாண்ட் என்ற வட இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளன. 

சமீபத்தில்  இயற்கைச் சீற்றம் கொண்டு புகுந்து விளையாடியதில் இப்பகுதிகள் அலங்கோலப்பட்டுப் போய்விட்டன. பல ஆயிரம் மக்களின் உயிர்கள் வீணாகப் பறிக்கப்பட்டுவிட்டன.  

இந்தப் பேரிடர்  நடந்த  பத்துநாட்களுக்கு முன்தான் அபூர்வாஸிலிருந்து இருவர் இந்த  சார்தாம் யாத்திரை மேற்கொண்டு  திரும்பியிருந்தனர். அதில் ஒருவர் என் மகள். போய் வந்தபின், மனதிற்கு  சொல்லொண்ணா நிம்மதியையும், பக்திப் பரவசத்தையும் தருகிற பயணமாய் இருந்தது என்றார்.   
இப்போது அவர்களின் மனதில் என்ன மாதிரியான  எண்ணங்கள் ஓடும்?   

சுயம் நலம் கருதி இயற்கையை, தான் இழுத்த இழுப்புக்கு  வளைக்க, மனிதர்கள்  முனைந்ததால், இயற்கை ஒரு கட்டத்தில் முரண்டு பிடித்து  தன் எதிர்ப்பைக் காட்டிவிடுகிறது. 

கங்கை, யமுனை ஆற்றின் குறுக்கே பல அணைகளைக் கட்டி, அதன் போக்கினை திசை திருப்பியதும் .. கரையோரங்களில் உயரமான கட்டிடங்களை எழுப்பியதும்,  அப்பகுதிகளில்  சுரங்க தொழிற்சாலைகளை  நிர்மாணித்ததும்தான்  இந்தப்  பேரிடருக்கும் உயிர்சேதத்திற்கும் காரணம் என்று இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்த நதிகள் பெருக்கெடுத்து சீற்றம் கொண்டு ஓடியதில் தன் பாதையை பழையபடியே அமைத்துக்  கொண்டு விட்டதாம். 

நிலவியல் ஆய்வாளர்கள், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த ஆபத்து பற்றிய எச்சரிக்கையை  அளித்து விட்டனராம். மக்கள் நலனை காக்க வேண்டிய  அரசு  அது பற்றிய அக்கறைக் கொள்ளாததுதான் உயிர்சேதத்திற்குக் காரணம் என்கிறார்கள். 

இயற்கையின் சில நிகழ்வுகள் இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை  அவ்வப்போது  தளர்த்தச் செய்து விடுகிறது.

இயற்கையின் சீற்றம் எதனால் ஏற்படுகிறது?  இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயல்படும் போது இயற்கைச் சீற்றம் கொள்கிறது..   இயற்கைச் சீற்றம் கொள்ளும் போது  பாதிக்கப்படுபவர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். 

மனிதர்களின் தவறுக்கு,  இறைவன் மீதும், இயற்கை மீதும் பழி சுமத்துவது தவறு  என்பதுதான்  நாம் அனைவரும் யோசிக்க  வேண்டிய விசயம். 

யாரோ செய்த தவறுக்கு அப்பாவி மக்களும், குழந்தைகளும் ஏன் சாகவேண்டும்?  இறைவன் ஏன் இவர்களைக் காப்பாற்றவில்லை? என்றக் கேள்வி  பலர் இதயத்தில் எழுவது இயற்கைதான். 

ஆனால் இதற்கான காரணங்களை  சொல்லும் போது , நம் மனம் அந்தப் பதில்களால் திருப்தி அடைவதில்லை. ப்ராப்தங்கள் , கர்ம வினைகளை காரணம் காட்டும் போது நம் அறிவு அதில் சமாதானம் அடைவதில்லை. 

விபரீதமான  சில   ஜாதக சூழ்நிலை உள்ளவர்கள்  ஒன்று சேரும் போது அவர்களின் மரணத்தோடு , தன்னோடு இருப்பவர்களையும் சேர்த்து கொண்டு சென்றுவிடுவார்கள் என்கிறது ஜோதிட விதி.  விபத்து, இயற்கை பேரிடர் போன்றவையெல்லாம் இப்படித்தான் நிகழ்கின்றன என்கிறது.
    
‘பூர்வ புண்ணிய பலம் அதிகம் உள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்.  அவர்களைக் கேட்டால், கடவுள் அருளால் பிழைத்துக்கொண்டேன்’  என்று சொல்வார்கள்.  

இந்த பூமியில் இவ்வளவுகாலம் தான் உன் வாழ்க்கை’ என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவரைதான் இந்தப் பூமியில் வாழ முடிகிறது. 

இப்படித்தான் வாழ்க்கை முடியும் என்றிருக்கும் போது அப்படியே முடிவடைகிறது.

 ஆனாலும் ஆன்மாவிற்கு அழிவில்லை. அது மீண்டும் பிறவி எடுக்கிறது என்பதே உண்மை. இந்த வார்த்தைகள்தான் நம் கவலைக்கு மருந்தாகிறது. மரண பயத்தினை அகற்றுகிறது.  

 நம் வாழ்க்கையில் நாம் அடைகின்ற சுய அனுபவங்களின் வாயிலாகத்தான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அடுத்தவரின் வார்த்தைகள் திருப்தி தராது. 

வலியின் வேதனை அடிபட்டவர்களுக்குத்தான் தெரியும்.  உறவுகளை இழந்தவர்களுக்குத்தான் பிரிவின் வேதனை எவ்வளவு கொடியது என்பது புரியும்.  காலம் ஒன்று மட்டுமே அவர்களின் காயத்திற்கு மருந்தளிக்க இயலும்.  

புனித பயணத்தில் இறந்தவர்களின் ஆன்மா  இறைவனையேச் சென்றடையும் என்பது நம் சமயம் கூறும் உண்மை. 

அவர்களின் ஆத்மா சாந்தியுறட்டும்! இறைவன் அவர்களுக்கு நற்கதியை வழங்கட்டும். 

இயற்கையை பூமியைத் தெய்வமாக வணங்கியவர்கள் இந்துக்கள். பஞ்சபூதங்களை வணங்கி நன்றி சொல்லி பொங்கல் வைத்து வழிபட்டவர்கள். 

நிலம் அதிர ஓடாதே என்று  வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். நீர்நிலைகளில் நிர்வாணமாக குளிப்பதும்,   எச்சில் துப்புவதும் அசுத்தம் செய்வதும் கூட பாவம் என்கிறது நம் மதம்.  

செடிகொடிகளைக் கூட இரவில் வெட்டாதே  அவற்றை உறங்கவிடு என்கிறது சாஸ்திரம். மூலிகை பறிப்பதற்கு முன் அந்த சாபம் போக மன்னிப்புக்கேட்டு மந்திரம் சொல்  என்று  எழுதி வைத்துள்ளனர். அவையெல்லாம் மறந்து போன விசயம் ஆகிவிட்டது. 

இயற்கையோடு விளையாடும் அரசாங்கங்களும், தனி மனிதர்களும் இனிமேலாவது தங்களின் தவறுகளைப் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ளட்டும்.  

பூமியில் கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர்
கடைசி மீனையும் பிடித்த பின்னர்
காற்றின் கடைசித் துளியையும் மாசு படுத்திய பின்னர்
ஆற்றின் கடைசிச் சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர் 
இந்த பணத்தைத் தின்ன முடியாது..

இந்த தென் அமெரிக்கப் பழங்குடி மக்களின் பாடலை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவதைத் தவிர  வேறென்ன சொல்லமுடியும்?  
   

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...