ads

Tuesday 3 December 2013

உமா மகேஸ்வர விரதம்


கோபக்கார முனிவர் துர்வாசர். கோபம் கொண்டால்  ரிஷிகளின் தவ வலிமை குறையும் என்பார்கள். ஆனால் இவரது தவ வலிமையோ கூடுமாம்.  அத்ரி மகரிஷிக்கும்  அனுசூயா தேவிக்கும் ருத்ராம்சமாகப் பிறந்தவர். சிறந்த சிவ பக்தர். 

இவரது சாபத்தால் மகாலக்ஷ்மி , தேவலோகத்திலிருந்து விலகியதால், இந்திரலோகமே லக்ஷ்மி கடாக்ஷம் இழந்துவிடுகிறது . அதன் பின் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய மகாலக்ஷ்மியின் அவதாரம் மீண்டும் நிகழ்ந்தது என்பதை அறிவோம். 

மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் இந்திரலோகத்தில் நீங்கிய போது வைகுந்தத்திலும் அவர் இல்லை.

காரணம் வைகுந்தபெருமாள் கருடனின் மேல் பவனி வரும்போது,  இந்திரனை சபித்து விட்டு கோபத்துடன் வந்து கொண்டிருந்த துர்வாசர் அவரைச் சந்திக்கிறார்.  

சிவபெருமானிடம் பெற்ற வில்வமாலையை திருமாலிடம் கொடுக்கிறார். திருமால் அம்மாலையை கருடனின் மேல் வைத்தபடி அவசரமாய் மகாலக்ஷ்மியை சந்திக்க வேண்டுமென புறப்படுகிறார்.  

துர்வாசருக்கு, திருமால் தான் கொடுத்த மாலையை அலட்சியமாய் வாங்கி கருடனின் மேல் வைத்தபடி அவசரமாய் புறப்பட்டு விட்டாரே  என்ற  வருத்தம் ஏற்பட்டது. 

தன்னை அலட்சியப்படுத்துகிறார் என்று நினைத்து ,  இந்திரலோகத்தில் மட்டுமல்ல, வைகுந்தத்திலும் மகாலக்ஷ்மி இப்போது இருக்க மாட்டார். அவர் பாற்கடலுக்குள் சென்றுவிடுவார். பின்னர் ஒரு சமயம்  வெளிப்படுவார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிடுகிறார்.  

வைகுந்தத்தில் மகாலக்ஷ்மியை காணாமல் திருமால்   கவலையடைகிறார். அதற்கான காரணம்  துர்வாசரின் கோபம் என்பதும் தெரிகிறது. அதன் பின் திருமால்,  கௌதம முனிவரின¢ ஆலோசனைப்படி உமாமகேஸ்வர விரதத்தை கடைபிடித்து , அதன் பயனாக மீண்டும் மகாலக்ஷ்மியை அடைகிறார் என்றொரு புராணக்கதை உண்டு. உமாமகேஸ்வர விரதத்தின் சிறப்பினை இக்கதை நமக்கு எடுத்துரைக்கிறது. 

இவ்விரதத்தை புரட்டாசி பௌர்ணமி தினத்தில் அனுஷ்டிக்கிறார்கள். தொடர்ந்து பதினாறு வருடங்கள் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

சிலர் ஒரு வருடத்துடன் முடித்துக் கொள்கிறார்கள்.  கலசங்கள் வைத்துமுறைப்படி பூஜைகள் செய்து  உமா மகேஸ்வரரை விரதமிருந்து  வழிபாடு செய்யவேண்டும்,

இந்த விரதத்தை அனுசரிப்பதினால்,  மனைவியைப் பிரிந்து தேசாந்திரம் சென்றவர்கள், காணாமல் போனவர்கள் யாவரும்  வீடு வந்து சேருவார்கள்’ என இவ்விரதத்திற்கு பலன் கூறப்படுகிறது. 

மற்றபடி புரட்டாசி பௌர்ணமி தினத்தில் சிவன் கோயில் சென்று உமாமகேஸ்வரரை வணங்கி வாருங்கள்.

Mathivanan

1 comment:

  1. நல்ல விரிவான விளக்கங்கள்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...