Follow by Email

Wednesday, 25 April 2012

ஜோதிடம் ஒரு விஞ்ஞான கலையா?

 வேதகால  ஜோதிடம் ஏற்ற சொற்தொடர் இன்றைக்கு சர்வ சாதாரணமாக பயன்படுத்த படுகிறது.  வேத காலத்தில் ஜோதிட நம்பிக்கை இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே... ஜோதிடத்தை வேத காலத்தோடு இணைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வேதகால ஜோதிடம் என்பதை விட, புராதன  கால ஜோதிடம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஓன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது. மிக தொன்மையான காலத்தில் இருந்து ஜோதிடத்தில் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. குறிப்பாக நம்முடைய பாரத நாட்டில் இந்த நம்பிக்கை பரவலாகவும், ஆழமாகவும் இருந்து வந்திருப்பதை உணர முடிகிறது.

நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் நாள் நட்சச்திரம் பார்த்து, நல்ல நாள் குறித்து காரியங்கள் செய்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

ஜோதிடத்தை நம்பாதவர்கள்  ராமனுக்கு முடிசூட்ட மகா பெரிய ஞானி வசிட்டர் தானே நாள் குறித்தார்.  ஆயினும் ராமனால் முடி சூட்டி கொள்ள முடியாமல் போனது ஏன்?

மனைவியோடு வனவாசம் செல்ல வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

இராமாயண கதையை படிக்கின்ற போது ஓன்று தெளிவாகிறது. ராமனுக்கு முடி சூட்ட வசிட்டர் நாள் குறிக்கவில்லை என்பது தான் உண்மை. முடி சூட்ட வேண்டிய அவசரத்தில் தசரதரே முடிவு செய்து விட்டு, நாள் குறித்த விவரத்தை ஒரு தகவலாக மட்டுமே வசிட்டரிடம் சொல்கிறார்.

வசிட்டர் அதை ஆட்சேபிக்கவில்லை  என்பது உண்மை. திரிகாலம் உணர்ந்த ஞானியான வசிடருக்கு என்ன நடக்க போகிறது என்பது தெரியாதா? தெரிந்திருக்க வேண்டும் என்று அனுமானிப்பதில் ஒன்றும் தவறில்லை.

பின் ஏன் அவர் அந்த சந்தர்ப்பத்தில் ராமனுக்கு முடி சூட்ட வேண்டாம் என்று தசரதருக்கு ஆலோசனை சொல்லவில்லை?

இதற்கும் பண்டிதர்கள் விளக்கம் சொல்கிறார்கள். ராமன் காட்டிற்கு போகாமலே இருந்திருந்தால் ராமாவாதரத்தின் நோக்கமே நிறைவேறி இருக்காது.

ராமனின் முடி சூடல் தவிர்க்க பட வேண்டும் என்பது விதி. அது இறைவன் போட்ட பாதை.  அது வசிடருக்கு தெரியும். திரிகாலம் உணர்ந்த ஞானி என்பதால்  விதி வழி நடப்பதை தடுக்க முடியாது என உணர்ந்த வசிட்டர் தசரதனின் முடி சூட்டும் முடிவை ஆட்சேபிக்கவில்லை என்ற விளக்கமும் சொல்லபடுகிறது.

இதை இன்னும் விரிவு படுத்தி பார்த்தல் ராமனின் விதி ராவணனின் விதியோடு இணைக்கபட்டு இருந்ததோ என்றும் என்ன வேண்டி உள்ளது. அதாவது வாழ்க்கை நடப்பில் ஒருவரின் விதி இன்னொருவரின் விதியோடு சம்மந்தபட்டதாகவே இருக்கிறது.


பழங்காலத்தில் நிமித்தம் பார்த்தல், சகுனம் பார்த்தல் ஆகியவை பழக்கத்தில் இருந்திருக்கின்றன.  மகாபாரதம் ராமாயணம் ஆகிய இதிகாசங்களில் இது போன்ற  சம்பவங்கள் நிறையவே வருகின்றன.

சித்திர  கூடத்தில் குடில் அமைக்கும்போது கூட ராமன் சகுனம் பார்கிறான். சிலப்பதிகாரம் உருவான பின்னணியை ஆராய்ந்தால் அரசவை நிமித்தன் சொன்ன  ஒரு கூற்று  இளங்கோவடிகளை துறவுபூன வைத்தது.

சேரன் செங்குட்டுவனையும், இளங்கோவடிகளையும் அரசவையில் பார்த்த நிமித்தன் மூத்தவன் சேரன்செங்குட்டுவனை விட இளையவனான இளங்கோ அடிகள்தான் அரசாள்வார் என்று குறி சொன்னான்.

மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டம் என்பதை ஏற்காத இளங்கோவடிகள்  மூத்தவனுக்கு வழி விட்டு துறவியானார் என்பது கதை.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் அடங்கி இருக்கிறது. இளங்கோவடிகள் துறவு கோலம் பூண்டு கண்ணகி காப்பியம் எழுதியதால் தான் சேரன் செங்குட்டுவனையே நமக்கு தெரியும்.

சேரன்செங்குட்டுவன் புகழ் நிலைக்க இளங்கோவடிகள்தான் காரணமானார். ஒரு விதத்தில் பார்த்தால் நிமிதன் கூற்று பொய்யாகி விட்டதாகவும் சொல்ல முடியாது.

ஏனெனில் இன்றுவரை மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அரசனாக  கொலு வீற்றிருப்பவர் இளங்கோவடிகள்தானே தவிர சேரன்செங்குட்டுவன்  இல்லை.

மனிதனுடைய பார்வையில் இருந்து அவனுடைய எதிர்காலம் மறைக்க பட்டு இருக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. அதே சமயம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுவது இயல்பு.

ஜோதிடக்கலை அதை கண்டு பிடித்து சொல்ல கூடிய ஒரு சாதனம் என்பதால் உலகெங்கும் உள்ள மக்கள் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  அரசன் முதல் ஆண்டி வரை எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளவே ஆசைபடுகிறான்.

பொதுவாக தங்களுடைய கஷ்டங்களுக்கு ஜோதிடத்தின் மூலம் பரிகாரம் கிடைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். சில குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் சொன்னால் தான் காரியம் செய்வது என்ற சங்கல்பத்தோடு இருக்கிறார்கள்.

ஜோதிடக்கலை விஞ்ஞான கலையா என்பதை ஆராயும்முன் ஜோதிடக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்து வருவதற்கு என்ன காரணம் என்பதையும்  யோசித்து பார்க்க வேண்டும்.

பயனில்லாத எதையும் மக்கள் தொடர்ந்து வைத்து கொள்வதில்லை. பயனற்ற பொருட்கள் வீட்டில் இருக்குமானால் அவற்றை அழித்து விடுகிறோம். பயனில்லாமல் சேர்ந்து விடுகிற குப்பை கூளங்களை தினமும் கூட்டி அப்பறபடுத்தி  விடுகிறோம்.

பயனற்ற எதையுமே போற்றி பாதுகாக்கிற பழக்கம் மனித இனத்திற்கு இல்லை.இந்த அடிப்படையில் பார்க்கும் போது, ஜோதிடம் முற்றிலும் மூட நம்பிக்கையாக இருக்குமானால், மனிதர்கள் இவ்வளவு காலம் அதை போற்றி பாதுகாத்து வைத்திருக்க மாற்றார்கள்.

ஒரு சில ஜோதிடர்கள் போலித்தனமான நம்பிக்கையை ஏற்படுத்துவதால் ஜோதிடகலையே தவறானது என்று ஆகி விடாது.  மருத்துவம் போன்ற துறைகளிலும் போலிகள் இருப்பது போலவே, ஜோதிட துறையிலும் இருக்கிறார்கள்.

ஜோதிடத்தை ஒரு வழிகாட்டியாக ஏற்று கொள்கிற வரை அதை நம்புகிறவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.

P .C . கணேசன் எழுதிய ஜோதிடம் ஒரு விஞ்ஞான கலையா? என்ற நூலில் இருந்து எடுக்க பட்டது இந்த கட்டுரை.  சுரா புக்ஸ் ( பிரைவேட் ) லிமிடெட் இன் நூலை வெளியிடு செய்திருக்கிறது.


No comments:

Post a Comment