ads

Wednesday 17 October 2012

சிந்திக்க சில நிமிடம்!


யாரோ, யாரைப்பற்றியோ, எங்காவது சொல்ல கேட்டிருக்கலாம்.

அவரு கோவக்காரரு.

அது என்னவோ படித்து வாங்கின பட்டம் மாதிரி பலருக்கு கூடவே இருக்கும். 

சரி... அது என்ன கோவம்?

வாள்...வாள்ன்னு கத்துறது. காட்டு கூச்சல் போடுறது. நான் யார் தெரியுமான்னு கேட்கிறது. முஷ்டியை உயர்த்துறது, கைகலப்பில் இறங்குறதுன்னு சொல்றிங்களா?

அதுதான். கெமிஸ்டியா  சொல்லப்போனால் உள்ளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு உருவம் வெளிஉலகை எட்டிப்பார்ப்பது. அது ஒரு மனிதனின் மறுபக்கம்.


சரி... கோவம் ஏன் வருது?

சுயமரியாதை சுடும்போது, நம் வார்த்தைகள் நிராகரிக்க படும்போது, நாம் அலட்சிய படுத்தும்போது, அவமானப்படும்போது கோவம் வரும்....வரணும் வந்தே தீரும்.

ஏசுநாதர் சொன்னார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை திருப்பி காட்டுன்னு.

மறுகன்னத்தில் அறைந்தால் முதுகை திருப்பி காட்டுன்னு அவர் சொல்லலை.

ஏன்?

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.


ஒரு கதை சொல்லவா?

ஒரு பக்தன். அவன் விஷ்ணு பக்தன் இருந்தான். தனக்கு எது நடந்தாலும் கடவுள் பார்த்து கொள்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன்.

ஒரு நாள் அவ்வூரை சேர்ந்த முரடனோடு வாய் வார்த்தையில் துவங்கிய வம்பு கடைசியில் கை கலப்பிற்கு வந்து விட்டது.

பாவம் பக்தன் வலி தாங்க முடியாமல் வாய் விட்டு கத்தினான். உதவுவோர் யாரும் இல்லை.


அடித்தவன் முரடனாயிற்றே.  கடைசியில் கடவுளே காப்பாத்து, கடவுளே காப்பாத்து என்று கத்தினான்.

மற்ற தெய்வங்களுக்கு காதில் விழுந்ததோ இல்லையோ, அனுதினமும் தன்னை துதிக்கும் பக்தனின் குரல் விஷ்ணுவுக்கு கேட்டது. அப்போது மகலக்ஷ்மியும் அருகில் தான் இருந்தார்.

பக்தனின் அழுகுரல் கேட்டதும் அவசரமாய் எழுந்தார்.

ஏன் சுவாமி... இவ்வளவு அவசரமாய் எங்கே போகிறிர்கள்.

தேவி.. பூலோகத்தில் என் பக்தனை ஒரு முரடன் போட்டு அடித்து கொண்டிருக்கிறான். அவன் வலி தாங்க முடியாமல் என்னை காப்பாற்று என்று,   என்னை நினைத்து பெரும் குரல் இடுகிறான்.

உடனே போய் அவனை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னவர், இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைத்தார். பின் உடனே வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

ஏன் சுவாமி..பக்தனை காப்பற்ற போகிறேன் என்று சொன்னீர்கள்  . போகாமல் திரும்ப வந்து உட்கார்ந்து விட்டீர்கள்.

இல்லை தேவி.. என் பக்தன் இப்போது முரடனாகி விட்டான்.

ஆம்.. என் பக்தன் தன்னை காப்பற்றி கொள்ள முரடனை திருப்பி அடிக்க துவங்கி விட்டான். இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை என்றாராம்.

இது பக்தனின் நியாமான கோவம்.


ஆனால் காரணம் இல்லாமல் வரும் கோவம் தான் கவலைக்குரியது. இதைதான் உடன் இருந்தே கொள்ளும் வியாதி என்றார்கள்.

கோவம்... கோவப்படுபவரை மட்டும் அல்ல, உடன் இருப்பவரையும்  அழித்து விடும்.

பாருங்களேன். இன்று நம்மை சுற்றி எத்தனையோ விதமான மனிதர்கள். உதட்டு சிரிப்பு உதட்டிலேயே இருக்கும்போது வெடித்து சிதறும் மனிதர்கள் எத்தனை பெயர்.


ஒவ்வொரு வினாடியும் யாராவது, யாரையாவது காயபடுத்தாமல் இருப்பதில்லை. பொதுவா.. அறிவை பயன்படுத்தாத கோவம் அழிவைத்தான் தரும். ஒரு கதை சொல்லவா?

அது ஒரு கிராமம். காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.


மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற  எண்ணம் கோவமாக உருவெடுத்தது.


உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா.

வந்தார் கடவுள்.

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே... நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.


இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.


சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப்  படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி  பார்த்தான். நின்றது சிங்கம்.


பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் ... ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை... சரிதானே.









1 comment:

  1. நல்ல கதை... அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...