ads

Sunday 25 November 2012

ராமாயணம் மகாபாரதம் ஒரு ஒப்பிடு


ராமாயணம் மகாபாரதம் என்கிற இரண்டு இதிகாசங்களும், நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவற்றில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பிங்கள் ஏராளம்.

முறையற்ற பெண்ணாசையும், அதீத மண்ணாசையும் கூடாது என்பதை இந்த பெரும் காவியங்கள் வழியாக அறிந்தாலும், மனித வாழ்க்கைக்கு அடிப்படியை இருக்க வேண்டிய பல உன்னத நெறிகளை அவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 

சந்தேகமற இந்த இரண்டுமே நமது இரு கண்ணாய் திகழ்கின்றன என்பது உண்மை.


விதுர நீதியையும், பீஷ்ம நீதியையும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கீதை உபதேசங்களையும் மகாபாரதம் தன்னகத்தே கொண்டிருந்தாலும், மனித நேயத்தை, அன்பின் உச்சத்தை எடுத்து காட்டும் காவியமாய் ராமாயணம் திகழ்கிறது. 

ஒரு குடும்பத்தில் நிகழும் அண்ணன் தம்பி பாசம், நட்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், தந்தை மகன் நேசம், தனி மனித ஒழுக்கம், பக்தி இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டும் உன்னத சித்திரமாய் ராமாயணம் அமைந்திருக்கிறது.


மகாபாரத்தில் கண்ணன் என்ற ஒரு மாபெரும் பாத்திரம், கதை முழுவதும் உலாவி, நமை வியக்க வைத்தாலும், ராமன் என்னும் மா மனிதன் தன் உயர்வான குணத்தின் மூலம், நம் உள்ளங்களில் ஒட்டி கொள்கிறான். 

நினைத்து  நினைத்து வியப்படையும், பெருமிதம் கொள்ளும் மகாபுருஷனாக உயர்ந்து நிற்கும் ராமன் பாத்திரம் போற்றப்படக்கூடிய பாத்திரம் மட்டும் அல்ல.  நாமும் பின்பற்ற வேண்டிய பாத்திரமாகும். 

அண்ணன் தம்பியின் சகோதர பாசத்தை ராமாயணத்தை போல் மகாபாரத்தில் காணமுடியவில்லை.

தன் ராஜ்ஜியத்தையே தம்பிக்காக விட்டு கொடுத்து விட்டு, தன் மனைவியுடன் கானகம் வருகிறான் ஒருவன்.

தன்னுடைய சகோதர்களுக்காக ஐந்தடி நிலம் கூட தரமுடியாதென தன் உடன் பிறப்புக்கள் அனைவரின் உயிர்களையும் பலிக்கொடுக்கிறான் ஒருவன்.

வேடனான குகனையும், எதிரியின் தம்பி விபிஷணனையும் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டு பாசத்தை பொழிகிறான்  ராமன்.

அனுமனை தன் மைந்தனாகவே அங்கிகரிக்கிறான். ஜடாயு என்ற பறவையை  தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றுகிறான். இறுதி சடங்கு செய்கிறான்.அன்பினால் பறந்து விரிகிறது ராமனின் இதயம்.

மகாபாரத்தில் இதன் சகோதர பாசம் சற்று குறைவாகவே சித்தரிக்கப் படுகிறது. தன் மூத்த சகோதரனான தர்மனை, அர்ச்சுனனும், பீமனுமே எதிர்த்து பேசும் சம்பவங்கள் மகாபாரத்தில் இடம் பெறுகின்றன.

இறுதிவரை அண்ணனின் நிழல் போல் நின்று அண்ணனின் சொல் மீறாமல் நடக்கும் லச்சுமணன் இங்கே நம்மை வியக்க வைக்கிறான். அண்ணன் கானகம் புறப்படும் முன் அவனுக்கு முன்னர் புறப்பட்டு தயாராகிறான்.

அண்ணனின் வாயில் இருந்து ஒரு ஆணை வந்தால் போதும், வில்லில் இருந்து புறப்படும் அம்பை போல் விரைந்து அதை நிறைவேற்றி வைக்கிறான். ராமனே பல இடங்களில் லச்சுமணனை வியந்து பாராட்டுகிறான்.

ராமனின் ஒரு தம்பி இப்படி இருக்க, இன்னொரு தம்பியோ தன் தாயின் வரத்தினால் ராமன் ராஜ்ஜியத்தை துறந்து கானகம் சென்றுவிட்டானென்று கேள்விப் பட்டு பதறி துடித்து ஓடி வருகிறான். 

அண்ணனின் காலில் விழுந்து, திரும்ப வந்து ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மன்றாடுகிறான். ராமன் அவனை சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பும் போது, ராமனின் பாதுகைகளை பெற்றுக்கொண்டு அவற்றை தன் சிரசில் சுமந்து கொண்டு அயோத்தி திரும்புகிறான். 

அதை அரியணையில்  வைத்து நாட்டை நிர்வாகம் செய்கிறான். ராமன் திரும்ப வரும்வரை ஒரு துறவியை போல் வாழ்கிறான். பாசத்திற்கு முன் ராஜ்ஜியம் பதவி எதுவுமே பெரிதில்லை என நிரூபிக்கிறான். 

ராமனோ இதற்கு ஒரு படி மேலாக நின்று, தன் தம்பிகளின் மேல் பாசம் பொழிவதல்லாமல், குகனையும் கட்டி தழுவி நாங்கள் நான்கு பேர், உன்னையும் சேர்த்து இப்போது ஐந்து பேர் என்று தன் தம்பியின் ஸ்தானத்தை குகனுக்கு தந்ததும், கல்லாய் சமைந்திருந்த அகலிகையின் மேல் கால் வைத்து அன்னை என்று அழைத்து தாயின் ஸ்தானத்தை தந்ததும், அனுமனையும், சுக்கிரிவனையும்  கட்டி தழுவி நட்பு பாராட்டியதும், அங்கதன் மேல் அன்பு காட்டியதும், விபிஷனனையும் தங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொண்டதும், சபரியின் நேசத்தை அங்கிகரித்ததும், ராமனை அன்பின் இலக்கணமாய் காட்டுகிறது. 

தாயினும் சாலப் பரிந்து என்று இறைவனின் அன்பைப்பற்றி கூறுவார் அப்பர் பெருமான். 

அதைப்போல ராமனின் அன்பு தாயன்பை விட மேலானதாகவே இராமாயண காப்பியத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. 

இந்த இரண்டு இதிகாசங்களில் மகாபாரதம் முடிவில் ஒருவித சோகத்தை வெறுமையை நம் நெஞ்சில் நிழலாட வைக்கிறது. ராமாயணம் ராமனின் பட்டாபிழேகத்துடன் சுபமாய் முடிந்து ஒரு நிம்மதி பெருமூச்சை எழுப்புகிறது. 

இந்த கதைகளை பற்றி நாம் பேச காரணமே.... அன்பு மகத்தானது. உறவுகளை ஒன்றிணைக்க வல்லது. எத்தனையோ நம் குடும்பங்களில் அண்ணன் தன்பிகள் எதிரிகள் போல் பிரிந்து கிடக்கின்றனர்.

சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.

இப்படி வெறுப்பினால், சண்டையினால் உடைந்து பிரிந்து போன உள்ளங்களை ஒட்டவைக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டு.


இந்த பிறவியில் நாம் அவர்களோடு ஒன்றாக வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. இறந்த பின் யாருக்கு யாரோ....

ஒரு தாயின் கருவறையில் பிறந்து, ஒன்றாய் வளர்ந்த உள்ளங்களுக்குகிடையே வெறுப்பினை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். மன்னிக்க  தெரிந்தவன் அதைவிட பெரிய மனிதன் என்பார்கள்.

நம்மால் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் பலர் இருப்பார்கள். நாம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் அதைவிட அதிகமாக இருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

சந்தர்ப்பம் வரும்போது சரி செய்து  கொள்ளுங்கள். உறவினை புதுப்பித்து கொள்ளுங்கள்.

நான் மனிதர்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் இருத்திக் கொள்வோம். உயர்ந்த மனிதராக வாழ்வோம்.

-  மதிவாணன்

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...