ads

Tuesday 7 January 2014

வேதாளமும் வேதியனும்- யமன் தர்மவானா?

 யமன் தர்மவானா?      

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக்கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

“அ ஹோய்.. வாரும் பிள்ளாய் வேதியனே!   உன்னைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!   

நீ துருவனை போன்ற திடமனதும் பக்தியும் உடையவனாகத் திகழ்கிறாய். நசிகேதனைப் போன்று தைரியசாலியாகவும்,  முயற்சியில் பின் வாங்காதனாகவும் இருக்கிறாய்.  

மரணத்தை வென்ற மார்க்கண்டேயனைப் போல் சிறுவயதிலேயே  சாஸ்திர ஞானம் பெற்றவனாய் ஒளிர்கிறாய்.  

வெகுகாலத்திற்கு முன்னால் எனக்கொரு நண்பன் இருந்தான். உஜ்ஜனியின் அரசன்.  அவன் பெயர் விக்கிரமாதித்தன்!



அவனைப் போல ஒரு மாமனிதனைச் நான் சந்தித்தே இல்லை.

 அவனுக்கு பிறகு நான் உன்னுடன் தான் பேசுகிறேன். 

நீ பேச விரும்ப மாட்டாய் என்பது தெரியும். ஆனால் யாருடனாவது பேசாமல் இருந்தால் எனக்கு தலை வெடித்துவிடும்!  

பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க நான் கதை  சொல்லிக்கொண்டே வருகிறேன்.. நீ கேட்டுக் கொண்டே வா..

‘இந்த பூமியின் ஆதிகாலத்தில் பிரம்மாவின் மகன்கள் என்று கூறப்படும்  காஸ்யபர், அத்திரி என்ற மகாமுனிவர்கள் வாழந்து வந்தனர்.

 காஸ்யபர் அதிதி தம்பதிகள் மூலமாக சூரியவம்சமும், அத்திரி அநுசூயா தம்பதிகள் வழியாக சந்திரவம்சமும் ஆரம்பமானது.

காஸ்யபருக்கும் அதிதி என்பவளுக்கும் பிறந்தவன் சூரியன். அதிதிக்கு பிறந்ததால் ஆதித்தன் என்று அழைக்கப்படுகிறான்.

சூரியனுக்கு இரண்டு மகன்கள் ஒருவன் யமன். இன்னொருவன் சனி.

 (அசுவினித் தேவர்கள், கர்ணன் சுக்கிரீவன் போன்றோரும் சூரியனின் பிள்ளைகளே.) 

மூத்தவனான யமனின்  பெயரையும் , இளையவனான சனியின் பெயரையும் கேட்டாலே  மக்கள் பயந்து நடுங்குகிறார்கள் ஆனால் இவங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்கன்னு சொல்றவங்களும் உண்டு.

இவங்க நல்லவங்களா? கெட்டவங்களாங்கிற சந்தேகம்  இன்னைக்கு வரைக்கும் எல்லோரின் மனசுலேயும் இருந்துக்கிட்டே இருக்கு. இதில் யமன் யமலோகத்துக்கு அதிபதி.  சனி கிரகாதிபதி.

 பூமியில் பிறவி யெடுக்கிற ஆன்மாக்களுக்கு பிரம்மா விதித்த ஆயுள் முடிந்ததும் அந்த உயிரை உடலிலிருந்து கவர்ந்து வந்து,  செய்து விட்ட பாவப்புண்ணியங்களுக்கேற்ப  தீர்ப்பெழுதி சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவது யமனின் கடமை. 

காலம் தவறாமல் தன் கடமையை நிறைவேற்றுவதால் யமனுக்கு காலதேவன் என்று பெயர்.

யமன் தன் கடமையிலிருந்து நழுவ வேண்டிய இக்கட்டும் சில சமயம் நேர்ந்திருக்கிறது. 

மார்க்கண்டேயன் 

 பதினாறு வயது மட்டுமே வாழும் விதிபெற்ற , மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரச்செல்லும் போது சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்டு மறைநிலையடைகிறார். 

ஏனென்றால் தேவர்களுக்கேது மரணம்?. சிவப் பக்தனான மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவியாகிறான்.  சூரியனார்க் கோயிலில்  சிவனை வணங்கித் தவமிருந்து மீண்டும் இழந்த பதவியைப் பெறுகிறார் யமன். 

மாண்டவ்ய மகரிஷி

அடுத்து மாண்டவ்ய முனிவர் விசயத்தில் சாபம் அடைகிறார்.

மாண்டவ்ய முனிவர் கானகத்தில் தவத்திலிருந்த போது , அரண்மனையில் பொருட்களைக் கொள்ளையடித்துக்கொண்டு, கொள்ளைக்காரர்கள் அவ்வழியே வருகின்றனர்.  

அவர்களை துரத்திக் கொண்டு வந்த அரண்மனை வீரர்களும் கொள்ளையர்களை பின்தொடர்ந்து வருகிறார்கள்.  கொள்ளயடித்தப் பொருட்களை மாண்டவ்ய முனிவரின் அருகே போட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓடிவிடுகின்றனர்.

மாண்டவ்ய முனிவர்தான் பொருட்களை கொள்ளையடித்துள்ளார் என்று தவறாக எண்ணிய அரச வீரர்கள் அவரை  சூலத்தில் குத்தியேற்றி விட்டு, பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

சூலத்தில் ஏற்றப்பட்ட முனிவர், நீண்ட நாட்களாக உயிர்பிரியாமல் வேதனையில் தவித்தார். இதை அறிந்த அரசன் ஓடிவந்து அவரை கீழே இறக்கி தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்கிறான்.

அவனை மன்னித்த முனிவர் நேரே யமனிடம் வருகிறார்.

நான் இத்தகைய துன்பத்தை அடையக் காரணம் என்ன? என்றுக் கேட்கிறார்.

 அவரது தவ வலிமையை உணர்ந்த யமன் , ‘ஸ்வாமி நீங்கள் பட்சிகளையும் வண்டுகளையும் இம்சித்தீர்கள் அதனால் இந்த தண்டனை’ என்கிறார்.

“இந்த பாவத்தை நான் எப்போது செய்தேன்?” என்று கேட்கிறார் முனிவர்.

‘நீங்கள் குழந்தையாய் இருந்த காலத்தில் செய்தீர்கள்’ , பதில் தருகிறார் யமன்.
’அறியாத வயதில் செய்த குற்றத்திற்கு கொடும்  தண்டனை  விதித்தது பெரும்குற்றம்.   நீ மனிதனாகப் பிறந்து தர்மங்களை சரியாகக் கற்று வா” என்று சாபம் கொடுக்கிறார் முனிவர்.

சாபத்தை பெற்ற யமன் அம்பாலிகையின் வேலைக்காரியின் வயிற்றில் வியாசருக்கு மகனாய் அவதரித்து விதுரர் என்று பெயர்பெற்று நேர்மையில் சிறந்து, விதுர நீதியை இயற்றி  முனிவரின் சாபத்தை நிறைவேற்றுகிறார்.

இத்தகைய  யமன் சாவித்திரியின் விசயத்திலும் தன் கடமையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். 

சாவித்திரி

அஸ்வபதி மன்னனுக்கு சாவித்திரி தேவியின் அருளால் பிறந்தவள் சாவித்திரி. 

அவள் துயுமதசேனனின் மகன் சத்திய சேனன் என்பனை விரும்பி மணந்து கொண்டு , இராஜ்ஜியங்களை இழந்த அவனோடு கானகத்தில் வசித்து வருகிறாள்.  குறை ஆயுளோடு பிறந்த சத்திய சேனனின் உயிரைக் கவர்ந்து செல்ல வருகிறார் யமன்.

கானகத்தில் சாவித்திரியின் மடியில் சத்தியசேனனின் உயிர்பிரிகிறது. கண்ணீர்விட்டு கதறிய சாவித்திரி நிமிர்ந்து பார்த்தபோது அங்கே யமன் நின்றுகொண்டிருப்பது தெரிகிறது.

சாவித்திரி உடனே எழுந்து அவரது காலடியில் பணிந்து யமராஜா! இந்த இளவயதில் என் கணவனின் உயிரைப் பறித்து செல்லல் நியாயமா ? அவரை விட்டுவிடுங்கள் என்று கதறுகிறாள்.

சற்றுநேரம் திகைத்த யமன் . தான் சாவித்திரியின் கண்களுக்கு தென்பட்டதன் காரணம் அவள் உமாதேவியின் மேல் வைத்திருந்த பக்தியே என அறிந்து கொள்கிறார். 

அதன்பின் பெண்ணே!  உன் கணவனின் உயிர் பிரிய காரணம் பிரம்மன் எழுதிய விதி. அதை என்னால் மாற்ற முடியாது என்கிறார்.

யமதர்மா! கணவனைப் பிரிந்த பதிவிரதைக்கு இவ்வுலகில் வேறென்ன வேலையிருக்கிறது நானும் உன்னுடன் வருகிறேன் என்று யமனைப் பின் தொடர்கிறாள். 

யமதர்மா! பூலோக வாசிகள் தேவலோகத்தினரைப் பார்ப்பது புண்ணியம் என்றும், அப்படிப் பார்ப்பதில் நற்பலன் விளையும் என்றும் தர்மசாஸ்திரங்கள் சொல்கின்றன. 

ஆனால் தங்களை பார்த்ததில் எனக்குக் கெடுதலே நேர்ந்திருக்கிறது. அப்படியென்றால் சாஸ்திரங்கள் சொன்னது பொய்யா? என யமனிடம் வினவுகிறாள் சாவித்திரி.

‘பெண்ணே! சாஸ்திரங்கள் சொல்வது பொய் ஆகாது. என்னைப் பார்த்த உனக்கு நன்மை விளையாமல் போகாது. உன் கணவனின் உயிரைத் தவிர வேறெதுவேண்டுமானாலும் கேள் தருகிறேன்’ என்கிறார்.

சாவித்திரியின் வேண்டுகோள்படி இழந்த நாட்டையும் , தன் மாமனாருக்கு கண்பார்வையும் வரமாய் பெற்றுக் கொண்டசாவித்திரி. நாட்டை ஆள தனக்கொரு வாரிசு வேண்டும் என்று வேண்டுகிறாள்.

‘ஒன்றென்ன நூறுபிள்ளைகள் பிறக்க ஆசிர்வதிக்கிறேன்’ என வரம் தருகிறார் யமன்.

‘நீதிதேவா? உங்கள் வாக்கு பலிக்கும்தானே?’

அதிலென்ன சந்தேகம்?  

‘நானோ பதிவிரதை.    என் கணவனைத் தவிர வேறொரு ஆணை மனதாலும் நினையாதவள் . என் கற்பின் தூய்மைக்கு பங்கம் உங்கள் வரத்தினால் வராதல்லவா?’ என வினவுகிறாள்.

தான் வசமாய்  மாட்டிக்கொண்டதை உணர்கிறார் யமன். அவளது கணவனின் உயிரைத் திருப்பித் தருவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை  என்பதை உணர்கிறார்.

கற்புக்கரசியே!  உன் விவேகத்தை மெச்சுகிறேன். உன் கணவனின் உயிரைத் திருப்பித் தருகிறேன் என்கிறார் யமன்.

மனம் மகிழ்ந்த சாவித்திரி , யமனின் பாதத்தில் பணிந்து அவரைப் போற்றுகிறாள்.

“முன்பு சூரியன் தவஞ்செய்து தர்மத்தை ஆராதனை செய்து உம்மைப் பெற்றதால் தர்மராஜன் என்ற பெயர் பெற்றீர்கள்! உமக்கு நமஸ்காரம். 

சகலவற்றிற்கும் சாட்சியாய் விளங்கும் உமக்குச் சர்வ பிராணிகளிடத்திலும் சமத்துவம் இருப்பதால் சமன் என்று பெயர் பெற்றீர்! உம்மை நான் நமஸ்கரிக்கிறேன்! 

பிரபஞ்சத்தில் எல்லா உயிர்களுக்கும் இறுதி அழிவு உண்டாக்குவதால் யமன் என்று பெயர்பெற்றீர்! உம்மை நான் வணங்குகின்றேன்.  காலத்திற்கு ஏற்றவாறு எல்லா பிராணிகளையும் நாசம் செய்வதால் கிருதாந்தகன் என்ற பெயரைப் பெற்றீர்! உம்மை நமஸ்கரிக்கிறேன். 

பாவிகளைச் சுத்தப்படுத்த தண்டாயுதத்தை தரித்துள்ளதால் தண்டாயுதன் என்னும் பெயர் பெற்றீர்! உம்மை நமஸ்கரிக்கிறேன். தபஸ்வியாகவும், பிரம்ம நிஷ்டராகவும், ஜிதேந்திரியாராயும் ஜீவர்களுக்குக் கர்ம பலத்தைக் கொடுப்பராகவும் இருப்பதால் யமன் என்றும பெயர்பெற்ற உம்மை நமஸ்கரிக்கிறேன். 

எல்லாம் உணர்ந்த சர்வஞராயும், பாவிகளுக்கு துயரத்தை வழங்குபவராகவும் புண்ணியசாலிகளுக்கு சிநேகிதராகவும் இருப்பதால் புண்யமித்திரன் என்னும் பெயர் பெற்றீர்! 

உமக்கு நமஸ்காரம். பிரம்ம அம்சம், பிரம்ம தேஜஸ் ஆகியவற்றால் பிரகாசித்து , பிரம்மத்தையே தியானிக்கும் உம்மை நமஸ்கரிக்கிறேன்”.   

சாவித்திரி யமனை வணங்குகிறாள். 

மனம் மகிழ்ந்த யமன் சாவித்திரிக்கு தர்ம சாஸ்திரங்களையும், பாவ புண்ணியங்களையும், தத்துவ ஞானங்களையும் , தான தருமங்களின் சிறப்பினையும் எடுத்துக் கூறுகிறார். சத்தியசேனனையும் உயிர்ப்பிக்கிறார்.

இப்படி வாக்குத் தவறாமல்  நடந்து கொண்ட யமன்,  நசிகேதன் என்பவன் மீது  காட்டிய கருணையைச் சொல்கிறேன் கேள்..

நசிகேதன்

உபநிஷ காலத்தில் வாழ்ந்து வந்தவர் வாஜசிரவஸ். அவரது மகன் நசிகேதன்.   புத்திசாலியாகவும் நேர்மையானவனாகவும் திகழ்ந்தான் நசிகேதன். 

ஒருமுறை வாஜ்சிரவஸ் வேள்வி ஒன்றை நடத்தினார். அப்போது கிழட்டு பசுக்களையும், பயனில்லாத பொருட்களையும் தானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அவரது மகன் நசிகேதனுக்கு தன் தந்தையின் நேர்மையற்ற செயல் பிடிக்கவில்லை. 

வாஜசிரவஸ் தான் முறைப்படி தன்னிடமிருந்த எல்லா பொருட்களையும் தானம் கொடுத்ததாக பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இடைமறித்த நசிகேதன் , ‘தந்தையே என்னை யாருக்கு தானமாக கொடுக்கப் போகிறீர்?’ என்று கேட்டான்.

அதைக் கவனியாததைப் போல தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் வாஜசிரவஸ்.   அதேக் கேள்வியை  தொடர்ந்து கேட்டுக¢கொண்டிருந்தான் நசிகேதன்.

நசிகேதனின் நச்சரிப்பால் எரிச்சலுற்று, “‘உன்னை நான் யமனுக்குத் தானமாக கொடுக்கப் போகிறேன்” என்கிறார் வாஜசிரவஸ்.

நசிகேதன் யமனைத் தேடிக்கொண்டு யமலோகம் வந்துவிட்டான்.

யமன் வெளியுலக சஞ்சாரம் சென்றிருந்ததால் நசிகேதன் யமலோக வாயிலிலேயே காத்திருக்க நேர்ந்தது.

மூன்று நாட்கள் கழித்து திரும்பிய யமன்  தனக்காக யம லோக வாயிலில் காத்திருந்த சிறுவனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

“சிறுவனே!  உன்னைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக  இருக்கிறது. உன் உயிரைத் தானமாக தரத்துணிந்து மூன்று நாட்களாக எனக்காக காத்திருக்கிறாய். ஆனால் உன் உயிரைத் தானமாகப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஆனாலும் உன்னை காக்க வைத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். அதனால் நாளுக்கு ஒன்றாக மூன்று வரங்களை உனக்குத் தருகிறேன் . உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள் , சந்தோஷமாக தருகிறேன்” என்றார் யமன்.

சிறிது நேரம் யோசித்த நசிகேதன் முதல் வரமாக , ‘என் தந்தைக்கு என் மேலுள்ள கோபம் அகல வேண்டும்’ என்று கேட்கிறான். ‘சரி அப்படியே ஆகுக’ என்கிறார் யமன்.

இரண்டாவதாக ‘சொர்க்கத்திற்கு செல்லும் மார்க்கம் என்னவென்று’ கேட்கிறான் நசிகேதன். 

‘அக்கினி வித்தை’ என்ற வேள்வியைச் சொல்லிக் கொடுத்து, சொர்க்கத்திற்கு போக உண்டான வழிமுறையையும் சொல்லிக் கொடுக்கிறார் யமன்.

அடுத்ததாய் ஒரு கேள்வி கேட்கிறான் நசிகேதன்.

“யம தர்மரே!  மனிதர்களின் இறப்புக்குப்பின் இந்த ஆத்மாவின் நிலை என்னவாகிறது என்பதைச் சொல்லுங்கள்?” என்று கேட்கிறான்.
யமன் உண்மையிலேயே திடுக்கிட்டுப்போகிறார்.

நசிகேதா! தேவர்களுக்கேத் தெரியாத ரகசியம் அது. அதைத் தவிர வேறு எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேள் சொல்கிறேன். அல்லது உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள், எதுவானாலும் தருகிறேன் என்கிறார். 

“தர்மதேவா! எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. நீங்கள் தந்த வாக்குப்படி எனக்கு மூன்றாவது வரமாக எனது கேள்விக்கான பதில் மட்டுமே வேண்டும்”  நசிகேதனின் குரலில் பிடிவாதம் தெரிந்தது.

யமன் இறங்கி வந்தார்.

நசிகேதன் ஒரு மாணவன் போல் யமன் முன்னால் பவ்யமாய் அமர்ந்து கொண்டான்.

“நசிகேதா!  கேள்!   இந்த உடம்பு அழிந்து போனாலும் ஆன்மாவிற்கு அழிவில்லை. அதைக் கண்ணால் காணமுடியாது. ஆத்மாவை அறிந்தவன் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை.   அது நிரந்தரமானது அது எங்கிருந்தும் உற்பத்தியாவதில்லை. அது எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.

நசிகேதா! இந்த உடம்பு தேர் போல. மனசு கடிவாளம் போல. புத்தி இருக்கே , அதுதான் சாரதி. 

 சாரதிக்கு கட்டுப்படாமல் ஓடினால் வண்டி தவறான பாதையில் போகும். அதுபோல் புத்தியின் சொல்லுக்கு  மனம் அடங்க வில்லையென்றால்  நாம் தப்பான வழியினில்  போய் கெட்டுப்போவோம்.

நசிகேதா!  ஜீவன் கட்டைவிரல் அளவு ஜோதியாய் இதயத்தில் உட்கார்ந்திருக்கிறான். 

எப்பொழுது இதயத்தின் முடிச்சுகள் இங்கே அவிழ்ந்து போகிறதோ அப்போதே சாகும் இயல்புடைய மனிதன் சாகாதவன் ஆகிறான்.  இதுதான் ஞான மார்க்கம்” என்ற  யமதர்மர் மேலும் ஆன்மாவின் நிலைகளைப் பற்றி விரிவாகப் போதிக்கிறார்.

யம தர்மரின் போதனைகளைக் கேட்ட நசிகேதன் , ஞான மார்க்கத்தைக் கடைபிடித்து , வினைகளிலிருந்து விடுபட்டு இறப்பில்லாத பிரம்ம நிலையை அடைகிறான். ( நசிகேதனுக்கு யமன் போதித்த ஞான மார்க்கமே யம கீதை என்று கூறப்படுகிறது)

“வேதியா!   கால தேவன் என்கிற யமனைப் பற்றிய, பல  சம்பவ  நிகழ்வுகளை  விரிவாகக் கேட்டாய்.

இனி நீ சொல் ! யமன் நல்லவனா ? கெட்டவனா?  அப்படி நல்லவன்னு சொன்னால்  ஏன் இப்படி யமன் பெயரைக் கேட்டவுடன்  எல்லோரும் பயப்படுகிறார்கள்..

ஏன் சிவனிடம் தண்டனையும் , மாண்டவ்யரிடம் சாபமும் பெற்றான்? கெட்டவனாக இருந்தால்  ஏன் இப்படி சாவித்திரிக்கும் நசிகேதனுக்கும் நன்மைகளைச் செய்தான்? 

இந்தக் கேள்விக்கு உனக்கு பதில் தெரிந்தும் சொல்லாமல் மௌனமாக  இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்” என்று கூறுகிறது வேதாளம்.

“வேதாளமே!  சூரியக்குமாரன் யமன் நல்லவனே! என்பதுதான் எனது உறுதியான பதில். 

மார்க்கண்டேயன் விசயத்திலும், மாண்டவ்ய முனிவரின் விசயத்திலும் யமன் செய்தது தவறேயல்ல.. தன் கடமையைச் மட்டுமே செய்தார். சிவப்பக்தனின் உயிரைக் கவரும்போது சிவலிங்கத்தையும் சேர்த்து தன் பாசக்கயிறால் இழுத்ததும், மாண்டவ்யர் விசயத்தில் நடந்ததும் கடமையின் போது ஏற்பட்டுவிட்ட கவனக் குறைவே.  

இதற்கான தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறார் யமன்.  யமனின் நடத்தையில்  குறைசொல்ல இயலவில்லை.
  
மேலும், தர்மநெறிகளின்படி வாழ்பவர்களை தர்மத்தின் தலைவனான யமனுக்கு மிகவும் பிடிக்கும், சாவித்திரியின் பதிவிரதைத் தன்மையும் அவளது தர்மநெறிகளுக்குட்பட்ட வாழ்க்கையும், பராசக்தியின் மேல் அவள்  கொண்ட பக்தியுமே ,  அவளுக்கு யார் கண்களுக்கும் படாமல் இருந்த யமனையும் காணும் சக்தியைக் கொடுத்தது. 

இதிலேயே அவளது உயர் தன்மையை யமன் அறிந்து கொண்டார். அவள்  கேட்ட வரத்தில் அவளது  விவேகமும் தெரிந்தது .  அதன்படியே  அவளது கணவனின் உயிரைத் திருப்பித் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாலும் கொடுத்த வாக்கை சந்தோஷமாக  நிறைவேற்றி அவளுக்கு தர்மநெறிகளைப்பற்றியும் போதித்தார்.  

 நசிகேதன் சிறுவனாக இருந்தாலும் அவனது விவேகமும்,  யமனுக்காக காத்திருந்த பொறுமையும், உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிற ஆர்வமும் யமனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. 

அதோடு தன் தந்தை தந்த நேர்மையற்ற தானத்தை  விமர்சித்த அவனது நேர்மையான குணமும் அவரைக் கவர்ந்தது.  எனவேதான் ஆத்ம ஞானத்தை அவனுக்குப் போதித்தார். 

இந்த உலகில் நீதி , நேர்மை நிலவுவதற்கும்  , பாவங்கள் அதிகரிக்காமல் இருப்பதற்கும் யமனே காரணம். நேர்மையான மனிதர்கள்  யமனைப் பார்த்து ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.  

நேர்மையற்ற  மனிதர்களே யமனைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.    அவர்களே யமனைக் கெட்டவன் என்கிறார்கள். 

தர்மநெறிபடி வாழ்பவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. அவர்களின் ஆன்மா ஒளிபெற்றிருக்கும்.  யமன் அவர்களை   மரியாதையுடன் வரவேற்று  அவர்களுக்குரிய நல்உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

சாவித்திரி தன் கணவனுக்காக யமனிடம் வாதிட்டது முப்பத்து மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணி நேரம்.  இந்த ஒன்றரை மணி நேரத்தை இன்றும் யமன் பாராபட்சமின்றி ஒவ்வொரு உயிருக்கும் தந்திருக்கிறார். 

அதாவது காலதூதுவர்களால் கொண்டு வரப்படும் உயிரின் ஆயுள் உண்மையிலேயே முடிந்து விட்டதா? அதை திருப்பி அனுப்ப  வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?  திருப்பி அனுப்பத் தேவையில்லையா என்பதையெல்லாம்  முடிவு செய்ய யமன் எடுத்துக் கொள்ளும் நேரமே இந்த மூப்பத்து மூன்றே மூக்கால் நாழிகை என்பது. 

எனவேதான் இன்றும் ஒருவர் இறந்த பின் ஒன்றரை மணிநேரம் கழித்தே அவருக்கு இறுதிச் சடங்குகளை ஆரம்பிக்கிறார்கள். 

இப்படி எல்லாவிதத்திலும் நேர்மையைக் கடைபிடிக்கும் சூரியனின் மைந்தன் யமதர்மன்

  மற்ற தெய்வங்களைப் போல , ஏன் அவர்களை விடவும் மிகவும் நல்லவனே! என்பதே என் பதில்”. என்று கூறுகிறான் வேதியன் .

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.






மதிவாணன் 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...