Follow by Email

Saturday, 4 January 2014

புலிகளின் இன்னொரு முகம்!!


2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. 

அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாகரீகம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 

அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் ‘யாழ்ப்பாணியம்’ என்பதே. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகளை விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனவோ, அவ்வாறான அர்த்தத்தில் ‘யாழ்ப்பாணியம்’ என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது. 

அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும். இதில் இன்னொரு  விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய ரீதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும்.

எனவே இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன்,  அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை தமது ‘மீட்பர்கள்’ என்றும், ;விடுதலை வீரர்கள்’ என்றும், ஏன் ‘கடவுளர்கள்’ என்றும் கருதிய ஒரு காலம் இருந்தது. இன்றும்கூட அவ்வாறான ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க சில சக்திகள் முயன்று வருகின்றனர். 

ஆனால் அவர்களது நிஜமுகம் என்ன என்பதை எனது இந்த அனுபவத்தொடர் ஓரளவு தன்னும் மக்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன். 

நான் அவர்களது கைதியாக இருந்த காலத்தில் நான் அனுபவித்த உடல் - உள வேதனைகளை மட்டுமின்றி, அவர்களால் அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அனுபவித்த  வேதனைகளையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகின்றேன். 

இதில் அவர்களது இயக்க உறுப்பினர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ‘சீவன்களின்’ துன்பங்களையும் உள்ளடக்குவது அவசியமானது.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, அவர்களது சிந்தனைகள், செயற்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றியும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கட்டமைத்து வந்த பாசிச நிர்வாக இயந்திரத்தின் தன்மை பற்றியும் நான் அவதானித்தவை, அவர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் பெறப்பட்டவை என்பனவற்றையும் நான் இங்கு தெரிவிப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

புலிகளால் நான் 1991 டிசம்பர் மாதம் 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு, 1993 ஜூன் 06ம் திகதி வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களது வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டேன். 

அவர்கள் ‘மனமிரங்கி’ என்னை விடுதலை செய்திராவிட்டால், இன்று நான் உங்களுடன் எனது கருத்துகளைப் பகிர்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள் என்னை விடுதலை செய்ததை எனது இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

எனது புலிகள் பற்றிய அனுபவங்கள் அவர்களின் கொடூரமான உருவத்தின் ஒரு வெட்டுமுகம் மட்டுமே. அதாவது ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல. அவர்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த இது போதுமானதல்ல. 

அதனை முழுமையாகக் கொண்டுவருவதாக இருந்தால், அவர்களால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, ஏதோ சில காரணங்களால் தப்பிப் பிழைத்து வெளியே வந்து, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னமும் பயத்துடன் முகம் காட்டாது வாழும் நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகள் முன்வர வேண்டும். அது அவர்கள் தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்திற்கும் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

எனது புலி வதை முகாம் அனுபவங்கள், அது ஏற்பட்டு 18 வருடங்கள் தாமதமாக வெளிவருவதற்கு காரணங்கள் உண்டு. 

நான் விடுதலையாகி வெளியே வந்ததும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வந்த எனது ஆத்ம தோழர்களும், நண்பர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வேறு பல சமூக ஆர்வலர்களும், நான் புலிகளின் இரும்புப் பிடியின் கீழ் இருந்த போது பட்ட அவலங்களின் துன்பங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து, உலகின் முன் வெளிச்சத்தில் வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். 

ஆனால் 1995ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வரை, நான் அவர்களது தீவிர கண்காணிப்புக்குள் இருந்ததினால், அந்தச் சூழ்நிலையில் எனது சுண்டு விரலைக்கூட அவர்களுக்குத் தெரியாமல் அசைக்க முடியவில்லை.

1999ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு சென்ற பின்னரும்கூட, அவர்களது வேவுக்கண்கள் என்னைப் பின்தொடர்ந்த வண்ணமே இருந்தன. 

மீண்டும் நான் அவர்களது தீவிர கண்காணிப்பு  வட்டத்துக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறேன் என்று உணர்ந்த நிலையில், தவிர்க்க முடியாமலும், மனம் விரும்பாத நிலையிலும், எனதும் எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக் கருதி நான் நாட்டை விட்டு 2004 டிசம்பர் 04ம் திகதி வெளியேறினேன். 

நான் புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டிலும்கூட புலிகளின் மரண நிழல் என் போன்றவர்கள் மீது படிந்து கொண்டே இருந்தது. அதனால் வெளிநாட்டுக்குத் தப்பி வந்தும்கூட, கடந்த 6 வருடங்களாக ஓரளவு ஒதுங்கி மறைந்து வாழ வேண்டியே இருந்தது. 

இப்பொழுது புலிகள் தாயகத்தில் பெரும்பாலும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, இன்றும்கூட அவர்கள் வைத்திருக்கும் பலமான சர்வதேச வலைப்பின்னல் காரணமாக, அந்தப்  பாசிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு உலகின் எந்த மூலையிலாவது பூரண பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது.

இருப்பினும் எமக்குள்ள வரலாற்றுக் கடமையை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். இது வரலாறு எமக்கு இடும் கட்டளையாகும். தவறுவோமாக இருந்தால், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காக சில துன்பங்கள் ஏற்படினினும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அந்த உணர்வின் காரணமாகவே நான் இத்தொடரை எழுத எண்ணினேன்.

நான் இதை எழுதும் போது உண்மையுடனும் சத்தியத்துடனும் அணிவகுத்துச் செல்லவே எப்பொழுதும் விரும்புகின்றேன். 

புலிகள் என்னைக் கைது செய்ததால்தான் நான் அவர்கள் மீது கோபம் கொண்டு இதை எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் மறுபக்கமாகப் பார்த்தால் நான் ஏதோவொரு வகையில் அவர்களது தீய செயற்பாடுகளை எதிர்த்ததாலேயே, அவர்கள் என்னைக் கைதுசெய்து சித்திரவதைக்குட்படுத்தினர் என்பதே உண்மையாகும். 

அந்த வகையில் பார்த்தால் மனிதகுல விரோதிகளான புலிகள் எனக்கு மாபெரும் கௌரவத்தை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றனர் வாழ்கின்றனர். இனப்பெருக்கம் செய்கின்றனர். தமது சந்ததிகளுக்காக சொத்துக்களைத் தேடி வைத்துவிட்டு மரணிக்கின்றனர். 

சொத்துத் தேடுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் மிருகங்ளும் கூடச் செய்கின்றன. எவன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தனது சக மனிதனுக்கு எதிராகவும், தன்னுடைய இன்றியமையாத சுற்றுச்சூழல் நண்பர்களான விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றுக்கு எதிராகவும் உருவாகும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறானோ, அவன்தான் உண்மையான மனிதன் ஆவான். இது நமது முன்னோடிகளால் எமக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும

இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், என்னுடன் புலிகளின் வதை முகாம்களில் சக கைதிகளாக இருந்து, எம்மில் சிலருக்கு கிடைத்த மீண்டும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல், புலிகளின் கொலைக்களங்களில் பலியிடப்பட்டவர்களுக்கும், எமக்குத் தெரியாமல் அவர்களால் மரணிக்க வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும், எனது கண்ணீராலும், இதயத்தில் கசியும் செந்நீராலும் அஞ்சலி செய்கின்றேன். 

அவர்களது துன்பப்படும் ஆத்மாக்கள் சாந்தி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கதைத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட நிலையிலும்கூட, உயிராபத்துகள், பல இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் நிலை தழும்பாது நின்று, புலிகளின் பாசிசச் செயற்பாடுகளை இறுதிவரை நம்பிக்கையுடன் எதிர்த்துப்  போராடிய இன்றும் போராடுகின்ற உண்மையான முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கும் சிரம் தாழ்த்துகின்றேன்.

எதிர்பாராத அழைப்பு

இங்கு நான் எழுதப்போகும் வரலாறு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆரம்பிக்கின்றது. அதாவது கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள்.

18 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சரியான தகவல்களுடன் தரமுடியுமா எனச் சிலர் கருதக்கூடும். உண்மைதான். 

உலகம் போகிற வேகத்தையும், நடக்கும் சம்பவ வரிசைகளின் அணிவகுப்பையும் பார்த்தால், நேற்று நடந்ததையே நாம் இன்று மறந்துவிடுகிற காலமிது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் துயரமான இந்த வரலாற்றுச் சம்பவங்கள் என்றுமே மறக்கக் கூடியவை அல்ல. அதுமாத்திரமின்றி தமிழ் சமூகத்தில் எனக்கு மட்டுமின்றி மேலும் பலருக்கு நிகழ்ந்த இந்த அவலங்கள் என்றோ ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக, முடியுமானவரை அவற்றின் குறிப்புகளை ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்தேன்.

எனவே சில வேளைகளில் ஒருசில சம்பவங்கள் மறந்துவிட்டிருந்தாலும், அவற்றக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை ஒருபோதும் புகுத்தமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.அது ஒரு வியாழக்கிழமை. நேரம் பிற்பகல் 3 மணியிருக்கும்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில,; ஆரியகுளம் சந்திக்கு சமீபமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக, நான் நிர்வகிக்கும் யாழ் புத்தக நிலையத்திலிருந்து, மிக அருகாமையில் அத்தியடி புது வீதியில் அமைந்திருந்த எனது வீட்டுக்கு மதிய உணவிற்காகச் சென்றேன்.

இந்த இடத்தில் இந்த யாழ் புத்தக நிலையம் பற்றியும் சிறிது சுருக்கமாகச் சொல்லிவிடுவது அவசியமானது. இந்தப் புத்தகக்கடை 1963ல் உருவானது. இது வெறும் வியாபார நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்றல்ல. 

1963ல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏறபட்ட போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அந்தப்பிளவு தோன்றியது. சோவியத் சார்பு – சீன சார்பு என ஏற்பட்ட அந்தப்பிளவில், சீன சார்பான கட்சி அணியினரின் பிரச்சார வெளியீடுகளை விநியோகிக்கவும், ‘கோஸி சூடியன்’ என அழைக்கப்படும், சீன சர்வதேச புத்தக வர்த்தக நிறுவனம் அனுப்பும் நூல்களை விநியோகிக்கவுமே இந்தப் புத்தக நிலையம் அமைக்கப்பட்டது.

எமது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு, 1972ல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைகளைச் செய்வதற்காக வரும்படி கட்சி என்னை அழைத்தது. எனவே 1966ம் ஆண்டுமுதல் வன்னிப்பிரதேசத்தில் விவசாயிகள் மத்தியில் நான் மேற்கொண்டிருந்த கட்சி – வெகுஜன வேலைகளை ஏனைய தோழர்களிடம் ஒப்படைத்துவிட்டு, யாழ்ப்பாணம் வந்து வேலைகளைப் பொறுப்பெடுத்தேன். 

அந்த வேலைகளில் ஒன்று இந்த யாழ் புத்தக நிலையத்தை நிர்வகிப்பதாகும். பின்னர் நாம் உருவாக்கிய ‘நொதேர்ண் பிறின்ரேர்ஸ்’ அச்சகத்தையும் நானே நிர்வகித்தேன்.

இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1975ல் நிறுவப்பட்ட பின்னர், பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் முற்போக்கான அரசியல் - கலாச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த, அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், அதன் அருகில் ஒரு புத்தகக் கடையை அமைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். 

அவரது வேண்டுகோளை ஏற்ற நான் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் சேர்.பொன்.இராமநாதன் வீதியில், குமாரசாமி வீதி தொடங்கும் இடத்துக்கு அண்மையில், 196ம் இலக்கக் கட்டிடத்தில் ‘யூனிவேர்சல் றேட்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்தேன்.

அந்த இடத்தை எனக்கு பெற்று உதவியர், அப்பொழுது யாழ்.பல்கலைக்கழகத்தில் கணிதபீட விரிவுரையாளராக இருந்த நண்பர் (இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் இங்கிலாந்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்) ஒருவராவார்.

இந்த இரு புத்தக நிலையங்களைப் பற்றியும் எமது அச்சகத்தைப் பற்றியும் இங்கு பிரஸ்தாபிப்பதின் காரணம், இவை யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் வரலாற்றில் வேறு எந்த நிறுவனங்களையும் விட அதிக பங்களிப்பு செய்ததுடன், நான் எழுதுகின்ற இந்த வரலாற்றுத் தொடருடன் அவை சம்பந்தங்களையும் கொண்டிருப்பதும் ஆகும். அதுபற்றி பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்பாணத்தில் டிசம்பர் மாதம் என்பது பருவ மழைக்காலத்துள் உள்ளடங்கிய ஒன்று. சில வேளைகளில் வீசும் காற்றில் சில்லென்ற குளிர் உள்ளுற உறைந்து நிற்கும். 

ஆனால் இந்த டிசம்பர் பின்மாலைப்பொழுது சற்று உஸ்ணமாக இருந்தது. அது சில வேளைகளில் அன்றைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் வீசிய அரசியல் அனல்காற்றின் வெப்பத்தை உள்வாங்கி இருந்ததோ என்னவோ?

நான் மதிய உணவு அருந்தச்சென்ற அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக முன்னொருபோதும் என்வீட்டுக்கு வந்திராத இருவர் என்னைக்காண வந்திருந்தனர். 

ஒருவர் எனது நண்பரான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆங்கில ஆசிரியராவார். அவர் தமிழ் தேசியவாதத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றபோதிலும், குருட்டுத்தனமாக அதை ஆதரிப்பவர் அல்ல.

இன்னொருவர் எனது சொந்த ஊரான இயக்கச்சி பகுதியிலுள்ள முகாவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ரெலோ இயக்கத்தில் ஒரு முக்கிய போராளியாக இருந்தவர். 

புலிகள் 1986ல் ரெலோ இயக்கத்தை தடைசெய்தபோது, பல இடங்களில் அந்த இயக்கத்தின் போராளிகள் பலரை குற்றுயிரும் குறையுயிருமாக பகிரங்க இடங்களில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. 

அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறான கொடும்செயலுக்கு உள்ளாக்கப்படுவதற்காக எமது ஊரைச்சேர்ந்த அந்த இளைஞனும் மல்லாகத்தில் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இதை அறிந்த அவரது தகப்பனார் எனது உதவி கோரி என்னிடம் வந்து கண்ணீர் வடித்தார். நான் புலிகள் இயக்கத்தில் அப்பொழுது அவர்களது ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற ஒருவரை அணுகி அந்த இளைஞனை உயிர்தப்ப வைத்திருந்தேன்.

அந்த இருவருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அளவளாவினோம். குறிப்பாக இந்திய அமைதிப்படை 1990ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், புலிகள் தமிழ் பகுதிகளில் நடாத்தி வந்த நரபலி வேட்டை குறித்து விசனத்துடன் உரையாடினோம். 

அதன்பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்ற பின்னர் மீண்டும் யாழ் புத்தக நிலையம் செல்வதற்குத் தயாரானேன். பிறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த எனது மகள், எம்முடன் தங்கியிருந்த எனது மனைவியின் தகப்பனாரின் மடியில் இருந்துகொண்டு எனக்கு கைகளை அசைத்து விடை தந்தாள்.

நான் மதிய உணவிற்கு செல்லும்போது, கடையில் பொறுப்பாக தவராசா என்ற முதிய தோழர் ஒருவரை விட்டுச் சென்றிருந்தேன். இந்தத் தோழர் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் நடத்துனராக (கொண்டக்ரர்) இருந்து ஓய்வுபெற்றவர். இவரது குடும்ப வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. 

உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் உரும்பிராயில் திருமணம் செய்திருந்தார். மனைவி வாய்பேச முடியாதவர். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் ஆக மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் மூவருமே வாய்பேச முடியாதவாகள்.

மகன்களில் ஒருவர் யாழ்.சின்னக்கடைப் பகுதியில் கடைச்சல் பட்டடை ஒன்றில் வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் வேலைக்குச் செல்லும் வழியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் திடீர் மோதல் ஒன்று நிகழ்ந்தது. 

அதில் அகப்பட்டுக்கொண்ட அவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி அந்த இடத்திலேயே மரணித்தார். இன்னொரு மகன் புலிகளுக்கு எதிரான இயக்கமொன்றுடன் தொடர்புள்ளவர் எனக்கூறி, புலிகள் அவரைத் தேடிவந்தனர். 

ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில், அதை எப்படியோ அறிந்துகொண்ட புலிகள் வீடு தேடி வந்துவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவரை சாப்பாட்டுக் கோப்பையுடன் வீட்டு முற்றத்துக்கு இழுத்துவந்து, பெற்றோர் சகோதரிக்கு முன்னால் சுட்டுப் படுகொலை செய்தனர். 

மகன்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியில் தோழா தவராசாவின் மனைவியும் சிறிது நாட்களில் மரணித்துவிட்டார்.

அதன்பின்னர் தவராசாவும் அவரது வாய்பேசமுடியாத மகளும் உரும்பிராயில் மிகவும் கஸ்டமான ஒரு சூழலில் வாழ்ந்துவந்தனர். கடுமையான ஆஸ்த்மா நோய் காரணமாகவும், முதுமை காரணமாகவும் அவரால் எந்தவொரு தொழிலையும் செய்ய முடியாத நிலையில், அவரது மகள் தான் கற்றிருந்த மணப்பெண் அலங்காரத் தொழிலில் இடையிடையே கிடைக்கும் வருவாயிலேயே அவர்களது வாழ்க்கை ஒருவாறு ஓடியது. 

அவர் தனது மன வேதனைகளை ஆற்றுவதற்காகவும், அரசியல் விவகாரங்களைக் கலந்துரையாடுவதற்காகவும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் எமது புத்தகக்கடைக்கு வந்துவிடுவார்.

இந்த நிலைமையில், அன்றும் அவரை புத்தகக்கடையில் விட்டுவிட்டே வீடு சென்றிருந்தேன். திரும்பவும் நான் புத்தகக்கடைக்கு சென்றபொழுது, எமது கடைக்கு முன்னால் இளைஞன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பது தெரிந்தது. 

தூரத்திலிருந்து நான் இதை அவதானித்தாலும், அவன் நின்ற நிலை, எதையோ அவன் எதிர்பார்த்து நின்றது போன்ற ஒரு தோற்றப்பாட்டை, எனது மனதில் உருவாக்கியது.

தொடரும்

நன்றி. 
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.

‘இது தேனீ’ வெளியிடு.

No comments:

Post a Comment